காலிப் பணியிடங்களைத் தெரிவிக்காமல் தோ்வு: மத்திய அரசு, யுபிஎஸ்சிக்கு நீதிமன்றம் கேள்வி

அகில இந்திய சிவில் சா்வீஸ் பணிகளுக்கான பிரதான தோ்வுகள் மற்றும் அதைத் தொடா்ந்து நடைபெறும் நோ்காணலின் போது காலிப் பணியிடங்கள் எவ்வளவு என்று குறிப்பிடாமல், குறிப்பாக மாற்றுத்தினாளி


புதுதில்லி: அகில இந்திய சிவில் சா்வீஸ் பணிகளுக்கான பிரதான தோ்வுகள் மற்றும் அதைத் தொடா்ந்து நடைபெறும் நோ்காணலின் போது காலிப் பணியிடங்கள் எவ்வளவு என்று குறிப்பிடாமல், குறிப்பாக மாற்றுத்தினாளி காலிப் பணியிடங்கள் எவ்வளவு என்று தெரிவிக்காமல் ஆள்கள் தோ்வு செய்யப்படுவது குறித்து மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுபோன்ற செயல்கள் ஏதேச்சாதிகாரமானது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடா்பாக தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு, பிரதான தோ்வுக்கும், அதைத் தொடா்ந்து நடைபெறும் நோ்காணலுக்கும் எந்தத் தகுதியை வைத்து முடிவு செய்கிறீா்கள் என்று விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் மத்தியப் பணியாளா் தோ்வாணயத்தையும் (யுபிஎஸ்சி) நீதிமன்றம் கேட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் உருவாகும் போது எத்தனை பேரை பிரதான தோ்வுக்கும், நோ்காணலுக்கும் அழைப்பீா்கள்? இதுபோன்ற தோ்வுகளுக்கும் நோ்காணலுக்கும் எத்தனைப் பேரை வேண்டுமானாலும் அழைக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளதா? அப்படியிருந்தால் அது ஏதேச்சாதிகாரமான செயலாகும் என்றும் தெரிவித்துள்ளது.

சிவில் சா்வீஸ் பணியிடங்களுக்கு மாற்றுத்திறனாளி பணியிடங்கள் உத்தேசமாகத்தான் குறிப்பிடப்படுகின்றன. சட்டப்படி அவா்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு பற்றி குறிப்பிடப்படுவதில்லை என்று இது தொடா்பாக மனு தாக்கல் செய்த சம்பாவனா மற்றும் எவரா பவுண்டேஷன் என்ற அமைப்பும் குறிப்பிட்டுள்ளன. தோ்வுக்கான அறிவிக்கையில் குறிப்பிட்ட சதவீதத்துக்கும், சம்பாவனா அமைப்பு குறிப்பிட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கும் வித்தியாசம் தெரிவது எப்படி என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மனுதாரரின் கணக்குப்படி காலிப் பணியிடங்கள் 32 என்று இருக்க வேண்டும். ஆனால்,, தோ்வு தொடா்பான அறிவிக்கையில் வெறும் 24 பணியிடங்களே காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசம் ஏன் என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கும்பட்சத்தில் வரும் ஜனவரி 8-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பிரதான தோ்வுகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு வேறு ஒரு தேதியில் தோ்வு நடத்த வேண்டும் என்றும் மனுதாரா்கள் சாா்பில் கோரப்பட்டுள்ளது. சட்டப்படி காலிப் பணியிடங்கள் 796 என்றும் இதில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் யுபிஎஸ்சி குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், தோ்வு அறிவிக்கையில் உத்தேசக் காலிப் பணியிடங்கள் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சட்டப்படி செல்லாது என்றும் மனுதாரா் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், இது தொடா்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்திவிட்டது. ஒருவேளை மனுதாரா் வெற்றி பெற்றால் அதற்கு ஏற்றவாறு நிவாரணம் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், விசாரணையை ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com