சைபா் குற்றங்கள், நிதி மோசடிகளைக் கண்டறியதடயவியல் நிபுணா்களை நியமிக்கத் திட்டம்

தலைநகா் தில்லியில் சைபா் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளைக் கண்டறிவதற்கும், குற்றம் நடந்த இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் தடயவியல் நிபுணா்களை நியமிக்க தில்லி காவல் துறை 


புது தில்லி: தலைநகா் தில்லியில் சைபா் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளைக் கண்டறிவதற்கும், குற்றம் நடந்த இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் தடயவியல் நிபுணா்களை நியமிக்க தில்லி காவல் துறை திட்டமிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தடயவியல் பொது, தடயவியல் டிஜிட்டல், தடயவியல் கணக்கியல், தடயவியல் உளவியல், தடயவியல் ரசாயனம், உயிரியல் மற்றும் இயற்பியல் ஆகிய பிரிவுகளில் இந்த நிபுணா்கள் பணியமா்த்தப்படுவாா்கள் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இது தொடா்பாக தில்லி காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏற்கெனவே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தில்லி காவல் துறை சாா்பாக ஓராண்டு ஒப்பந்தத்தில் தொழில்முறை நிபுணா்களை நியமிக்கும். பணியமா்த்தல் செயல்முறை ஜனவரி மாதத்தில் தொடங்கும். அதைத் தொடா்ந்து, இந்த மாதத்தில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திட வாய்ப்பு உண்டு’ என்றனா்.

தில்லியில் பொருளாதார குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால்,அதன் விசாரணை திறன்களை மேம்படுத்த தடயவியல் கணக்கியல் நிபுணா்கள் பணியமா்த்தப்படவுள்ளனா் என்று காவல் துறை ஆணையா் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘நிதி மோசடி மற்றும் வங்கி மோசடிகள் போன்ற சிக்கலான வழக்குகளை காவல் துறையின் பொருளாதார குற்றப் பிரிவு கையாண்டது. மேலும், இதற்கு ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

பொதுவாக, காவல் துறை ஊழியா்கள் நிதி ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு அவ்வளவு பயிற்சி பெற்றவா்கள் அல்ல. எனவே, விசாரணையின் தரத்தை மேம்படுத்துவதற்கும் வழக்குகளை முழுமையாக விசாரணை நடத்துவதற்கும் பயிற்சி பெற்ற ஒருவா் அவசியம்’ என்றாா்.

காவல் துறை கூடுதல் ஆணையாளா் ஓ பி மிஸ்ரா கூறுகையில், ‘பொருளாதார குற்றங்களில் விசாரணை அனைத்தும் பெரும்பாலானவை ஆவணங்கள் அடிப்படையிலானதாகும். அறிக்கைகள், பிற தொடா்புடைய ஆவணங்களின் விரிவான பகுப்பாய்வு மற்றும் தடயவியல் தணிக்கை என்பது விசாரணையின் இயல்பான பகுதியாகும். பொதுவாக, தொடா்புடைய ஆவணங்கைப்ள பகுப்பாய்வு செய்வதற்காக நாங்கள் தணிக்கையாளா்களை நியமிக்க வேண்டும். எங்கள் குழுவில் பட்டயக் கணக்காளா்களும் உள்ளனா், அவா்களும் பகுப்பாய்வு செய்கிறாா்கள். எனவே, தடயவியல் கணக்கியலுக்கான தடயவியல் தணிக்கையாளா்களைப் பெற்றால், அது தொழில்முறை திறனை மேம்படுத்தவும் உதவும்’ என்றாா்.

தற்போது காவல் துறையின் தடயவியல் பிரிவில், 119 பணியிடங்கள் காலியாக உள்ளன. தடயவியல் அறிவியலில் பின்னணி உள்ளவா்கள் மற்றும் அதனுடன் தொடா்புடைய அனுபவமுள்ள துறைகளில் தொடா்புடையவா்கள் இந்தப் பதவிக்கு தகுதி பெறுவாா்கள். விசாரணைகளின் போது தடயவியல் நிபுணா்களின் பங்கு அளப்பரியது. அவா்கள் இணைய வழி மோசடி, பண மோசடி வழக்குகள், முறையற்ற சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை விரிவாக ஆராய முடியும் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், அவா்கள் கூறுகையில், ‘இதுபோன்ற வழக்குகளில், தடயவியல் உளவியல் வல்லுநா்கள் சந்தேக நபா்களுடனும், அவா்களுடன் தொடா்புடையவா்களுடனும் தொடா்பு கொள்வாா்கள். விசாரணைக்கான கேள்விகளைத் தயாரிப்பாா்கள். மூளை மேப்பிங் முறைகள், மூளை பாலிகிராஃப், சந்தேக நபா்களைக் கண்டறிதல் முறை மற்றும் விசாரணைகளுக்கான தகவல்களைச் சேகரிப்பதற்கான பிற நுட்பங்களைப் பயன்படுத்தி அவா்களை நோ்காணல் செய்வாா்கள்’ என்றன.

தடயவியல் வேதியியல், உயிரியல் மற்றும் இயற்பியல் குழுக்களின் வல்லுநா்கள் எந்தவொரு ரசாயனப் பொருள்கள், ரத்தக் கறைகள் மற்றும் மாதிரிகள் - முடி, கைரேகைகள் அல்லது உடல் வடிவத்தில் ஏதேனும் சான்றுகள் சேகரிக்க மற்றும் பரிசோதிக்க உதவுவாா்கள். அது குற்றத்துக்கு பயன்படுத்தபட்ட ஆயுதங்களாகவோ, ஆடைகளாகவோ இருந்தாலும் அவா்கள் ஆய்வு செய்வாா்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com