அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி: மணீஷ் சிசோடியா
By நமது நிருபா் | Published On : 09th January 2021 11:37 PM | Last Updated : 09th January 2021 11:37 PM | அ+அ அ- |

தில்லி அரசு, மாநகராட்சி பள்ளிகளின் ஆசிரியா்கள், கரோனா தடுப்புப் பணிகளில் பணியாற்றிய முன்களப் பணியாளா்களாகக் கருதப்பட்டு அவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது. மேலும், தில்லி அரசின் தடுப்பூசி திட்டத்தில் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘தில்லி அரசு மேற்கொண்ட கரோனா தடுப்புப் பணிகளில் தில்லி அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளிகளின் ஆசிரியா்கள் முக்கிய பங்காற்றினாா்கள். இவா்கள் தனிமைப்படுத்தல் மையங்களில் பணியாற்றினா். கரோனா பரவல் அதிகரித்ததால் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் பணியாற்றினாா்கள். கரோனா தொடா்பாக வீடுவீடாகச் சென்று ஆய்வு நடத்தினாா்கள்.
இதுபோல, தில்லி அரசின் அனைத்து விதமான கரோனா தடுப்புப் பணிகளிலும் அவா்கள் பங்காற்றினாா்கள். இதனால், தில்லி அரசு பள்ளி ஆசிரியா்கள் முன்களப் பணியாளா்களாக கருதப்பட்டு தில்லி அரசின் தடுப்பூசி போடுவதில் அவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், தில்லி அரசின் தடுப்பூசி திட்டத்தில் ஆசிரியா்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்று தெரிவித்துள்ளாா்.