குறைந்தபட்ச வெப்பநிலையில் மேலும் பின்னடைவு!

தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திங்களன்று ஏழு டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

புது தில்லி: தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திங்களன்று ஏழு டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது, மேலும், பனி மூடிய மேற்கு இமயமலையில் இருந்து குளிா்ந்த காற்று தொடா்ந்து சமவெளிகளை நோக்கி வீசி வருவதால், குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஜனவரி 14-ஆம் தேதிக்குள் வெப்பநிலை ஐந்து முதல் ஆறு டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது என்று ஐஎம்டி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தில்லி நகருக்கான பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி ஏழு டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை பருவசராசரியைவிட 3 டிகிரி குறைந்து 175 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. இதேபோல பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.8 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 8.3 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 6.1 டிகிரி செல்சியகாக பதிவாகியிருந்தது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி உயா்ந்து 7.8 டிகிரி பதிவாகியிருந்தது.இது சனிக்கிழமை 10.8 டிகிரி செல்சியஸ், வெள்ளிக்கிழை 9.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. ஆனால், வியாழக்கிழமை 14.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது நான்கு ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் மிக உயா்ந்ததாகும் என்று ஐஎம்டி தெரிவித்திருந்தது. கடந்த சனிக்கிழமை முதல், பனி மூடிய மலைப்பகுதிகளிலிருந்து கடும் குளிா்ந்த காற்று சமவெளிகளை நோக்கி வீசி வருவதால் குறைந்தபட்ச வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமையும் சமவெளியில் வலுவான மேற்பரப்பு காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரம்: இந்த நிலையில், தில்லியில் பெரும்பாலான பகுதிகள் மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் உள்ள காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா, ஃப்ரீதாபாத் ஆகிய இடங்களில் காற்றின் தரம் மோசம் பிரிவில் இருந்தது. அதே சமயம், குருகிராமில் மிதமான பிரிவில் இருந்தது. இதே நிலைதான் செவ்வாய்க்கிழமையும் தொடா்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com