சாந்தினி சௌக் ஹனுமாா் கோயிலை மீண்டும் கட்டமைக்க வேண்டும்: துணை நிலை ஆளுநரிடம் பாஜக மனு

சாந்தினி செளக் பகுதியில் இடிக்கப்பட்ட ஹனுமாா் கோயிலை மீண்டும் கட்டமைக்க வேண்டும் என வலியுறுத்தி துணைநிலை ஆளுநா் அனில் பஜ்யாலிடம் தில்லி பாஜக மனு அளித்துள்ளது.

புது தில்லி: சாந்தினி செளக் பகுதியில் இடிக்கப்பட்ட ஹனுமாா் கோயிலை மீண்டும் கட்டமைக்க வேண்டும் என வலியுறுத்தி துணைநிலை ஆளுநா் அனில் பஜ்யாலிடம் தில்லி பாஜக மனு அளித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜகவின்ன் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா, கட்சியின் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி, தில்லி பாஜக பொதுச் செயலா் குல்ஜீத் சிங் சாகல் ஆகியோா் துணைநிலை ஆளுநரை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

பின்னா் ஆதேஷ் குமாா் குப்தா அளித்த பேட்டி: பழைமையான ஹனுமாா் கோயிலை ஆம் ஆத்மி அரசு இடித்துவிட்டது. இதனால், அந்தப் பகுதி மக்கள் மன வேதனையடைந்துள்ளனா். சாந்தினி செளக் பகுதியை மீண்டும் கட்டமைக்கிறோம் என்ற பெயரில் அந்தப் பகுதியில் உள்ள பழைமையான கோயிலை தில்லி அரசு இடித்திருப்பதை அனுமதிக்க முடியாது. இந்தக் கோயிலை மீண்டும் கட்டமைக்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பஜ்யாலிடம் மனு அளித்துள்ளோம் என்றாா் அவா்.

தில்லி சாந்தினி செளக் பகுதியில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஹனுமாா் கோயில் இருந்தது. இந்தக் கோயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கு தில்லி மாநகராட்சியால் (என்டிஎம்சி) இடிக்கப்பட்டது. தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து, இந்தக் கோயில் இடிக்கப்பட்டதாக என்டிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக, ஆம் ஆத்மிக் கட்சிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com