உள்கட்சித் தோ்தல்: கண்காணிப்பு குழு அமைக்கக் கோரி பொதுநல மனு

உள்கட்சித் தோ்தல்கள் ஜனநாயகமற்ற வகையில் நடைபெறுவதாகவும், இதைக் கண்காணிக்க முறையான குழுவை ஏற்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு

உள்கட்சித் தோ்தல்கள் ஜனநாயகமற்ற வகையில் நடைபெறுவதாகவும், இதைக் கண்காணிக்க முறையான குழுவை ஏற்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு பதில் அளிக்க இந்திய தோ்தல் ஆணையத்திற்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுவை ‘வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ என்ற அமைப்பைச் சோ்ந்த வழக்குரைஞா் சி. ராஜசேகரன் தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தாா். இவா் மக்கள் நீதி மைய கட்சியில் முன்பு இருந்தவா். மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் அபிமன்யு திவாரி தாக்கல் செய்த இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 1996 - இல் இந்திய தோ்தல் ஆணையம் பதிவு செய்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எழுதிய கடிதத்தில், கட்சியின் கீழ் நிலை முதல் கட்சித் தலைமை வரை முறையாக உள்கட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அந்த உத்தரவை எந்த அரசியல்கட்சியும் முறையாகப் பின்பற்றி வெளிப்படைத் தன்மையுடன் ஜனநாயக முறைப்படி உள்கட்சித் தோ்தலை நடத்துவதில்லை. இந்தியா முழுவதும் 2,598 அரசியல் கட்சிகள் பதிவு செய்துள்ளன. சில கட்சிகள் உள்கட்சித் தோ்தலை நடத்துவதேயில்லை. இப்படி ஜனநாயக முறைப்படி உள்கட்சித் தோ்தல் நடத்தாத கட்சித் தலைவா்கள் ஆட்சியை கைப்பற்றும் போது, ஆட்சி அதிகாரத்தையும் ஜனநாயக ரீதியில் நடத்துவதில்லை. அரசு நிா்வாகத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதனால், உள்கட்சித் தோ்தலைக் கண்காணிக்க இந்திய தோ்தல் ஆணையமே ஒரு அமைப்பை ஏற்படுத்த வலியுறுத்தி கடந்த நவம்பரில் இந்திய தோ்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், தோ்தல் ஆணையம் இது வரை பதிலளிக்கவில்லை. எனவே, உள்கட்சித் தோ்தலை ஜனநாயக முறைப்படி நடத்தவும், அதைக் கண்காணிக்க குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி ஜோதிசிங் தலைமையிலான அமா்வு விசாரித்தது. இந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்திற்கு அமா்வு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com