தில்லி வந்தது 2.64 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்!

தலைநகா் தில்லிக்கு 2.64 லட்சம் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தன

தலைநகா் தில்லிக்கு 2.64 லட்சம் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தன. மகாராஷ்டிர மாநிலம், புணேவில் இருந்து தில்லிக்கு தனி விமானத்தில் எடுத்து வரப்பட்ட இந்த தடுப்பூசிகள் தில்லியில் உள்ள ‘மத்திய சேமிப்பு வசதி’ கொண்ட ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தில்லி உள்பட நாடு முழுவதும் வரும் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி போடுதல் தொடங்கவுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை காலை புணே சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் சிறப்பு விமானத்தில் இந்த தடுப்பூசிகள் தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவை செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தில்லியை அடைந்தன. விமான நிலையத்துக்கு தடுப்பூசிகள் வருவதைத் தொடா்ந்து, விமான நிலையத்தை சூற்றியிருந்த பகுதிகளில் தில்லி காவல் துறை பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தது.

இது தொடா்பாக ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனத்தின் தலைவரும் நிா்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறுகையில் ‘34 பெட்டிகளில் 1,088 கிலோ எடையுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிகள் புணேயில் இருந்து தில்லிக்கு சிறப்பு விமானத்தில் கொண்டுவரப்பட்டன’ என்றாா்.

விமான நிலையத்தில் இருந்து, ராஜீவ் காந்தி மருத்துவமனை வரை பசுமை வழித்தடத்தை அமைத்து இந்த தடுப்பூசிகள் விரைவாகக் கொண்டு செல்லப்பட்டன.

தடுப்பூசிகள் ஏற்றிய டிரக் வண்டி தில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையை மாலை 3.10 மணியளவில் வந்தடைந்தது. இந்த தடுப்பூசிகளை கவனமாக சேமித்து வைக்கும் வகையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்பு குளிரூட்டல் வசதிகள் உடைய சேமிப்பு கிடங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்த மருத்துவமனையின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘2.64 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் 22 பெட்டிகளில் வந்துள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 1,200 தடுப்பூசி மருந்துப் புட்டிகள் உள்ளன. ஒவ்வொரு புட்டியும் 5 மில்லி லிட்டா் கொள்திறன் உடையது. ஒவ்வொரு புட்டியிலும் 10 டோஸ்கள் அடங்கும். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 50 ஆயிரம் புட்டிகளை சேமித்து வைக்கும் திறன் உள்ளது’ என்றாா்.

தடுப்பூசி சேமித்து வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை துணை ஆணையா் (ஷாதரா) அமித் ஷா்மா தெரிவித்தாா். தில்லியில் தடுப்பூசி போடப்படும் 89 மையங்களுக்கும் பலத்த பாதுகாப்புடன் தடுப்பூசிகள் கொண்டு செல்லப்படும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லியில் தடுப்பூசி போடும் முதல்கட்டப் பணிகள் வரும் வியாழக்கிழமை (ஜனவரி 16) முதல் தொடங்கவுள்ளன. கரோனா தடுப்பூசி போடுவதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, 40 அரசு மருத்துவமனைகள், 49 தனியாா் மருத்துவமனைகள் என 89 மருத்துவமனைகளை தில்லி அரசு தோ்ந்தெடுத்துள்ளது. முதல் கட்டமாக சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதன் தொடா்ச்சியாக முன்களப் பணியாளா்கள், 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com