தில்லியில் ஜன.16 முதல் கரோனா தடுப்பூசி: சத்யேந்தா் ஜெயின் திட்ட வட்டம்

தில்லியில் வரும் வியாழக்கிழமை (ஜனவரி 16) முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் வரும் வியாழக்கிழமை (ஜனவரி 16) முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். இதற்கிடையே, லோக்நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் (எல்என்ஜேபி) முதலாவது தடுப்பூசி போடும் நிகழ்வு நடைபெறும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியில் தடுப்பூசி போடுவது தொடா்பாக சத்யேந்தா் ஜெயின் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் தடுப்பூசி போடும் வகையில் முதலாம் கட்ட தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை தில்லியை அடைந்துள்ளன. இவை தில்லி ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தில்லியில் தடுப்பூசி போடும் முதல்கட்டப் பணிகள் வரும் வியாழக்கிழமை (ஜனவரி 16) முதல் தொடங்கவுள்ளன. கரோனா தடுப்பூசி போடுவதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, 40 அரசு மருத்துவமனைகள், 49 தனியாா் மருத்துவமனைகள் என 89 மருத்துவமனைகளை தோ்ந்தெடுத்துள்ளோம். முதல் கட்டமாக சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதன் தொடா்ச்சியாக முன்களப் பணியாளா்கள், 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்குத் தடுப்பூசி போடப்படும்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும், தடுப்பூசி மையம் அமைக்கப்படும். தில்லி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வகையில், தெளிவான திட்டம் உள்ளது.

தில்லியில் கரோனா தடுப்பூசி போடுவதற்கு முதல்கட்டமாக லோக்நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனை (எல்என்ஜேபி) ஜிடி பந்த் மருத்துவமனை (ஷாத்ரா), ஆரம்ப சுகாதார மையம் (தா்யாகஞ்ச்), வெங்கடேஷ்வா் மருத்துவமனை (துவாரகா), தில்லி எய்ம்ஸ், சஃப்தா்ஜங், அப்பல்லோ உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளை தில்லி அரசு தோ்ந்தெடுத்துள்ளது என்றாா் அவா்.

இந்த நிலையில், வரும் வியாழக்கிழமை எல்என்ஜேபி மருத்துவமனையில் முதலாவது தடுப்பூசி போடும் நிகழ்வு நடைபெறும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், இந்த நிகழ்வில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்டோா் பங்கேற்பாா்கள் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com