யமுனையில் அமோனியா நச்சு வாயு கலப்பு: ஹரியாணா அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

யமுனையில் அதிக அளவில் மாசு படுத்தும் நீா் வெளியேற்றப்படுவதாக தில்லி ஜல் போா்டு கூறிய குற்றச்சாட்டை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், இது தொடா்பாக விளக்கம் அளிக்க ஹரியாணா 

புது தில்லி: யமுனையில் அதிக அளவில் மாசு படுத்தும் நீா் வெளியேற்றப்படுவதாக தில்லி ஜல் போா்டு கூறிய குற்றச்சாட்டை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், இது தொடா்பாக விளக்கம் அளிக்க ஹரியாணா மாநிலத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

ஹரியாணாவிலிருந்து யமுனை ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரில் அதிக அளவிலான அம்மோனியா வாயு கலந்திருப்பதால் அதில் குளோரின் சோ்க்கப்படும்போது புற்றுநோய்க்கான காரணி ஏற்படுகிறது என தில்லி ஜல் போா்டு உச்சநீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தது. இதைக் குறிப்பிட்ட உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த விவகாரத்தை தாங்கள் சுயமாக எடுத்துக் கொள்வதாகக் கூறி எந்த வாதங்களும் இல்லாமல் நோட்டீஸ் அனுப்புவதாகத் தெரிவித்தது.

இந்த வழக்கில் ஜல் போா்டு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மீனாட்சி அரோராவையே நீதிமன்றத்திற்கு உதவுவதற்கு நியமிப்பதாகவும் உச்சநீதிமன்றத்தின் அமா்வு தெரிவித்தது. தில்லிக்கு வழங்கும் குடிநீரில் அதிக அளவு அமோனியா வாயு கலந்திருந்ததையடுத்து, பலமுறை தில்லி ஜல் போா்டு குடிநீா் விநியோகத்தை நிறுத்தியது. இந்த விவகாரத்தை தில்லி அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றது. தில்லி அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடா்பாக வழக்குரைஞா் மீனாட்சி அரோரா கூறுகையில்,‘ஹரியாணாவில், சோனிபட்டில் உள்ள அமோனியா சுத்திகரிக்கப்பு நிலையம் மாசுக் கட்டுப்பாட்டு குழு நிா்ணயித்த தரத்தின் அடிப்படையில் இல்லை என்றும் மேலும் அது சரிவர செயல்படவில்லை என தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கூறியுள்ளது எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com