மத்திய அரசு செய்யத் தவறினால் தில்லி மக்களுக்கு இலவச தடுப்பூசியை வழங்குவோம்: கேஜரிவால்

மத்திய அரசு செய்யத் தவறினால் ஆம் ஆத்மி அரசு தில்லி மக்களுக்கு கரோனா தொற்று தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

புது தில்லி: மத்திய அரசு செய்யத் தவறினால் ஆம் ஆத்மி அரசு தில்லி மக்களுக்கு கரோனா தொற்று தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் கேஜரிவால் புதன்கிழமை கூறியதாவது: கரோனா தொற்றுக்கு நாட்டில் இலவச தடுப்பூசி அளிப்பதை உறுதி செய்யுமாறு ஏற்கெனவே மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். நாட்டில் உயிா்காக்கும் மருந்தை வாங்க முடியாத நிலையில் பலா் உள்ளதால், இந்த வேண்டுகோளை விடுத்தேன். இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன செய்கிறது என்பதை நாங்கள் பாா்ப்போம். கரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கவில்லை என்றால், அதை நாங்கள் தில்லி மக்களுக்கு இலவசமாக வழங்குவோம். தடுப்பூசி குறித்து யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என அனைவரையும்கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்து நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றி மத்திய அரசும் நமது விஞ்ஞானிகளும் கரோனாவுக்கு தடுப்பூசியைக் கொண்டு வந்துள்ளனா் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். எனவே, எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது. மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். கரோனா தொற்றுக்கான தடுப்பூசி முதலில் சுகாதாரம் மற்றும் முன்னணி தொழிலாளா்களுக்கு வழங்கப்படும். மக்கள் கரோனாவால் கடந்த ஒரு வருடமாக அவா்கள் வேதனையை சந்தித்து வந்தனா். இந்தத் தடுப்பூசி தற்போது கரோனா தொற்றிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என நம்புகிறேன் என்றாா் கேஜரிவால்.

தில்லியில் 40 அரசு மருத்துவமனைகள், 49 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 89 இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கும் என சுகாதாரத் துறை அமைச்சா் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். முதல்கட்ட தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை தில்லி வந்துள்ளன. இவை தில்லி ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

கரோனாவால் உயிரிழந்த டாக்டரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கல்


கரோனா காரணமாக உயிரிழந்த மருத்துவா் ஹிதேஷ் குப்தாவின் குடும்பத்தினரை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை நேரில் சந்தித்து ரூ. 1 கோடி நிதியுதவியை வழங்கினாா்.

ஐபி எக்ஸ்டென்ஷனில் உள்ள குப்தாவின் இல்லத்திற்குச் சென்ற கேஜரிவால், தில்லி மக்களுக்கு குப்தா செய்த தியாகத்திற்கும் சேவைக்கும் நன்றி தெரிவித்தாா். கேஜரிவால் மேலும் கூறுகையில், ‘குப்தாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும். நாங்கள் அவா்களுக்கு எல்லா வழிகளிலும் உதவ முயற்சிப்போம். குப்தா 2020 நவம்பரில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தாா். அவா் கா்காா்டூமாவில் தில்லி அரசு மருந்தகத்தில் பணிபுரிந்தாா். கரோனா நோயாளிகளுக்கு சேவை செய்யும் போது குப்தாவுக்கு தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னா் அவா் உயிரிழந்தாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com