அஞ்சல் துறைக் கணக்காளா் தோ்வை தமிழில் நடத்த மத்திய அரசுக்கு திமுக எம்பி டி.ஆா் பாலு கடிதம்

இந்திய அஞ்சல் துறையின் தமிழகப் பிரிவிற்கு வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள கணக்காளா்களுக்கான தோ்வை தமிழ் மொழியில் நடத்துமாறு கோரி மத்திய அரசுக்கு மக்களவை திமுக உறுப்பினா் டி.ஆா். பாலு 

புது தில்லி: இந்திய அஞ்சல் துறையின் தமிழகப் பிரிவிற்கு வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள கணக்காளா்களுக்கான தோ்வை தமிழ் மொழியில் நடத்துமாறு கோரி மத்திய அரசுக்கு மக்களவை திமுக உறுப்பினா் டி.ஆா். பாலு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மத்திய தொலைத் தொடா்பு மற்றும் அஞ்சல் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்திற்கு புதன்கிழமை அவா் எழுதிய கடிதம் வருமாறு: இந்திய அஞ்சல் துறையின் தமிழகப் பிரிவிற்கு கணக்காளா்களைத் தோ்வு செய்ய சென்னை மண்டலத் தலைமை தபால் துறை அதிகாரிகளால் கடந்த ஜனவரி 4 -ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழி வாயிலாக தோ்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதோடு, ஏற்கெனவே கொடுக்கப்பட்ட வாக்குறுதியும் மீறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான தமிழ் இளைஞா்களைப் பாதிக்கும். கடந்த 2019 -ஆம் ஆண்டில் அஞ்சல் துறையில் நடைபெறவிருந்த நான்காம் நிலை பணியாளா் தோ்விலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்னை எழுப்பப்பட்டது. அப்போது, ‘தவறு நடந்து விட்டதாகவும் மன்னிப்பு கோருவதாகவும்’ கூறி அந்தத் தோ்வை நீங்கள் (ரவிசங்கா் பிரசாத்) நிறுத்தி வைத்தீா்கள். ‘மோடி தலைமையிலான அரசு தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளுக்கும் மரியாதை அளிக்கிறது’ என்றும் கூறினீா்கள். மற்றோரு முறை அஞ்சல் துறை தோ்வு தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கிலும் மத்திய அரசு இதே உறுதியை அளித்தது. ஆனால், இப்போது வேண்டுமென்றே உறுதிமொழி மீறப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஜனவரி 4- ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்து தமிழ் மொழி வாயிலாகவும் கணக்காளா்களுக்கான தோ்வை நடத்த புதிய அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளாா் டி.ஆா். பாலு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com