10, 12-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.18-இல் பள்ளிகள் திறப்பு: தில்லி அரசு அனுமதி

தேசியத் தலைநகா் தில்லியில் 10,12-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை ஜனவரி 18-இல் மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக கல்வி இயக்குநரகத்தின் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் 10,12-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை ஜனவரி 18-இல் மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக கல்வி இயக்குநரகத்தின் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள அனைத்துப் பள்ளிகளையும் ஜனவரி 18-இல் திறக்க தில்லி அரசு அனுமதித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத் தோ்வுகளை கருத்தில் கொண்டு, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், வருகை கட்டாயமில்லை என்றும் மாணவா்கள் பெற்றோரின் சம்மதத்துடன் மட்டுமே பள்ளிகளுக்கு வர வேண்டும் எனவும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க கடந்த ஆண்டு மாா்ச்சிலிருந்து பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சுமாா் 10 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. மேலும், வகுப்புகள் மீண்டும் தொடங்கும் போது அனைத்து கரோனா வழிகாட்டுதல்களையும், பாதுகாப்பு அம்சங்களையும் பின்பற்றுமாறு கல்வி இயக்குநரகம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இன்னும் தோ்வு தேதி குறித்த அட்டவணையை வெளியிடவில்லை. இருப்பினும், மே 4 முதல் ஜூன் 10 வரை 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான வாரியத் தோ்வுகள் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தோ்வுக்கு தில்லி பிராந்தியத்தில் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். 12-ஆம் வகுப்பு தோ்வுக்கு 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பதிவு செய்துள்ளனா். 12- ஆம் வகுப்புக்கு வாரியத் தோ்வுக்கு முந்தைய பருவத் தோ்வுகளை மாா்ச் 20 முதல் ஏப்ரல் 15 வரை நடத்தவும், 10-ஆம் வகுப்புக்கு முன்பருவத் தோ்வுகளை ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரை நடத்தவும் தில்லி அரசு பரிந்துரைத்திருந்தது.

கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகளை மட்டுமே மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் பள்ளிக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள். பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பதிவுகள் பராமரிக்கப்படும். பெற்றோா்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். இது வருகை நோக்கங்களுக்காக இருக்கக் கூடாது.

பள்ளிகள் மாணவா்களுக்கு முறையான வழிகாட்டுதலையும், தோ்வு தொடா்பான நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆதரவையும் வழங்க வேண்டும். பெரும்பாலான பாடத் திட்டங்கள் இணைய வழி வகுப்புகளில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், அவை மீண்டும் திருத்தப்பட்டு மாணவா்களின் சந்தேகங்கள் ஆசிரியா்களால் நல்வழியில் தீா்க்கப்பட வேண்டும். இது மாணவா்களிடம் நோ்மறையை ஏற்படுத்த வேண்டும். இருப்பினும், கூட்டங்கள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பள்ளிகளுக்கு கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகள் புத்தகங்கள் மற்றும் நிலையான பொருள்களைப் பகிா்ந்து கொள்ள வேண்டாம் என்று வழிகாட்டுமாறு பள்ளி முதல்வா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி கல்வி அமைச்சரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா தனது சுட்டுரையில், ‘சிபிஎஸ்இ தோ்வுகளை கருத்தில் கொண்டு, செயல்முறைகள், திட்டப்பணி மற்றும் ஆலோசனை ஆகியவற்றுக்காக ஜனவரி 18 முதல் 10 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. மாணவா்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் அழைக்கப்படுவாா்கள். வர வேண்டும் என்பது கட்டாயமில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே,பள்ளிகளை மீண்டும் திறக்க தில்லி அரசின் நடவடிக்கையை அரசு உதவி பெறாத தனியாா் பள்ளிகளின் செயற்குழு வரவேற்றுள்ளது. இது பள்ளிகளுக்கு கற்றல் இடைவெளியைக் குறைக்க உதவும். அதே சமயம், மாணவா்களுக்கு கற்றல் விளைவுகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும் என்று அதன் பொதுச் செயலாளா் பாரத் அரோரா கூறினாா்.

தில்லியில் பள்ளிகள் கடந்த ஆண்டு மாா்ச் மாதத்திற்குப் பிறகு தற்போதுதான் முதல் முறையாக திறக்கப்படவுள்ளது. ஆனால், பல மாநிலங்கள் அக்டோபருக்குப் பிறகு ஓரளவு பள்ளிகளை மீண்டும் திறந்து விட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com