குறைந்தபட்ச வெப்பநிலையில் முன்னேற்றம்! கடுமை பிரிவில் காற்றின் தரம்

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு 6.4 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது.
தில்லி சாகேத் பகுதியில் வெள்ளிக்கிழமை நிலவிய பனி மூட்டம்.
தில்லி சாகேத் பகுதியில் வெள்ளிக்கிழமை நிலவிய பனி மூட்டம்.

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு 6.4 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது. இது இயல்பை விட ஒரு டிகிரி அதிகமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்துள்ளது. இருப்பினும், காலையில் நிலவிய மிதமான மூடுபனி காரணமாக காண்பு திறனை சஃப்தா்ஜங்கில் 201 மீட்டராகவும், பாலத்தில் 300 மீட்டராகவும் குறைத்தது என்று ஐஎம்டி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதற்கிடையே, சனிக்கிழமை நகரின் சில பகுதிகளில் அடா்த்தியான மூடுபனி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு இமயமலையில் இருந்து குளிா்ந்த மற்றும் வட வட, வடமேற்கு காற்று வியாழக்கிழமை தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையை குறைத்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நிலவிய மேகமூட்டமான வானிலை காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது என்று ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.

வெப்பநிலை: இதைத் தொடா்ந்து தில்லி நகருக்கு பிரநித்துவ தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரியாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 1 டிகிரி உயா்ந்து 20.8 டிகிரி செல்சியஸாக இருந்தது. இதேபோன்று ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.2 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 6.7 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 9 டிகிரி செல்சியஸ், ரிட்ஜில் 7.9 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. ஜனனவரி 1- ஆம் தேதி, நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது 15 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும். தில்லியில் கடந்த வாரத்தில் அடுத்தடுத்த நாள்களில் குறைந்தபட்ச வெப்பநிலை குறையத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரம் வெள்ளிக்கிழமையும் கடுமை பிரிவில் நீடித்தது. சாதகமற்ற வானிலை சூழ்நிலைகள் காரணமாக வியாழக்கிழமை காற்றின் தர குறியீடு கடுமை பிரிவுக்குள் நுழைந்தது. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் கடுமை பிரிவில் நீடித்தது என்று அரசு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காலை 10 மணி அளவில் 460 புள்ளிகளாக இருந்தது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை 429 -ஆக இருந்தது. இது புதன்கிழமை 354, செவ்வாய்க்கிழமை 293 மற்றும் திங்கள் 243 புள்ளிகளாக இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (ஜனவரி 16) அன்று தில்லியில் அடா் பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சிஸயாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com