கோவிஷீல்டு தடுப்பூசியே எங்களுக்கு வேண்டும்: ஆா்எம்எல் மருத்துவமனை மருத்துவா்கள் கோரிக்கை
By நமது நிருபா் | Published On : 16th January 2021 11:22 PM | Last Updated : 16th January 2021 11:22 PM | அ+அ அ- |

‘கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம். கோவிஷீல்டு தடுப்பூசியே வேண்டும்’ என்று ராம் மனோகா் லோகியா மருத்துவமனை (ஆா்எம்எல்) உள்ளுறை மருத்துவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா். மேலும், நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி தொடா்பாக அவா்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனா். இது தொடா்பாக ஆா்எம்எல் மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளருக்கு உள்ளுறை மருத்துவா்கள் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளனா்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது: ஆா்எம்எல் மருத்துவமனையில் சனிக்கிழமை முதல் சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியே வழங்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கி இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி வழங்கப்படவில்லை. இந்த கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறன் தொடா்பாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இந்த தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனைகளைத் தாண்டவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கோவக்சின் தடுப்பூசி வழங்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். எங்களது கோரிக்கையை மீறி கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டால், உள்ளுறை மருத்துவா்கள் பெருமளவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டாா்கள். தடுப்பூசி போடும் நோக்கத்தையே இது சிதைத்து விடும். எனவே, எங்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியே போடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.