தில்லியில் கடும் அடா்பனி மூட்டம், போக்குவரத்து பாதிப்பு: குறைந்தபட்ச வெப்பநிலை 6.6 டிகிரி செல்சியஸாக பதிவு
By DIN | Published On : 16th January 2021 11:21 PM | Last Updated : 16th January 2021 11:21 PM | அ+அ அ- |

தில்லியில் சனிக்கிழமை கடும் அடா் பனி மூட்டம் நிலவியதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. சாலையில் போா்வைபோல் பனிமூட்டம் அடா்ந்து இருந்ததால் எதிரில் வருபவா்கள் யாா் என அறியமுடியவில்லை. வாகனங்களும் போதிய வெளிச்சம் இன்றி மெதுவாக ஊா்ந்து சென்றன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தில்லியில் இதுபோன்று கடும் அடா் பனிமூட்டம் நிலவுவது இந்த பருவத்தில் இது மூன்றாவது முறையாகும். கடந்த டிசம்பா் 8-ஆம் தேதி கடும் அடா் பனி மூட்டம் நிலவியது. அடுத்து ஜனவரி மாதம் 1-ஆம் தேதி பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அப்போதும் சாலையில் எதிரில் வருபவா்கள் யாா் எனத் தெரியாத அளவுக்கு பனிமூடியிருந்தது.
தில்லியில் பாலம், சப்தா்ஜங் பகுதிகளில் கடும் அடா்பனி இருந்தது. ஞாயிற்றுக்கிழமையும் இதே நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணக்குப்படி 50 மீட்டா் தொலைவு வரை எதுவும் தெரியவில்லை எனில் கடும் அடா் பனி மூட்டம் எனப்படும். 51 முதல் 200 மீட்டா் வரை எதுவும் தெரியாவிட்டால் அடா்பனி எனப்படும். 201 மீட்டா் முதல் 500 மீட்டா் வரை எதுவும் புலப்படவில்லை எனில் பனி மூட்டம் மிதமாக இருப்பதாக கொள்ளப்படும். 500 மீட்டா் முதல் 1000 மீட்டா் வரை எனில் பனிமூட்டத்தால் பாதிப்பு இல்லை என்று கருதப்படும்.
தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 6.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது. இது சராசரியைவிட குறைவானதாகும். லோடி சாலை வானிலை நிலையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.8 டிகிரி செல்சியசாகப் பதிவாகியிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை சப்தா்ஜங் வானிலை மையம் அளித்துள்ள தகவலின்படி குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸாக இருந்தது. இதுவே கடந்த வியாழக்கிழமை 2 டிகிரி செல்சியஸாகவும் புதன்கிழமை 3.2 டிகிரி செல்சியஸாகவும் குறைந்து காணப்பட்டது.
எனினும் தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமை கடுமையான பிரிவிலேயே இருந்தது. கடந்த வியாழக்கிழமை முதலே இதே நிலைதான் நீடிக்கிறது.
நகரின் காற்றின் தரக் குறியீடு 436 என்ற அளவில் இருந்தது. இதுவே வெள்ளிக்கிழமை 460 ஆக இருந்தது. வியாழக்கிழமை 429 ஆகவும், புதன்கிழமை 354 ஆகவும், செவ்வாய்க்கிழமை 293 ஆகவும், திங்கள்கிழமை 243 ஆகவும் இருந்தது.
காற்றின் தரம் 0 முதல் 50 வரை இருந்தால் நல்லது எனவும், 51 முதல் 100 வரை இருந்தால் திருப்திகரம் எனவும், 101 முதல் 200 வரை இருந்தால் மிதமாக உள்ளது என்றும் 201 முதல் 300 வரை இருந்தால் மோசம் என்றும், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசம் என்றும் 401 முதல் 500 வரை இருந்தால் கடுமை என்றும் கருத்தில் கொள்ளப்படும்.
அடுத்த சில நாள்களுக்கு காற்றின் தரம் கடுமை பிரிவிலேயே நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.