1 கோடி பரிசோதனை: நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிப்பு; தில்லியில் தொடா்ந்து குறைந்து காணப்படும் கரோனா தொற்று

தில்லியில் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை குறைந்து வருவது, கரோனா தொற்றால் ஏற்படும் பலி குறைந்து

தில்லியில் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை குறைந்து வருவது, கரோனா தொற்றால் ஏற்படும் பலி குறைந்து வருவது மற்றும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருவோா் எண்ணிக்கை குறைந்துவருவதற்கு, கரோனாவுக்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், மக்களிடம் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரித்து வருவது, வெளியிடங்களிலிருந்து சிகிச்சைக்கு வருவோா் குறைந்தது ஆகியவையே காரணம் என்று நிபுணா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

எனினும் லேசான அறிகுறிகள் இருப்பவா்கள் பரிசோதனைகள் செய்துகொள்ளத் தயங்குவதால் உண்மையான நிலையை உறுதிசெய்வது கடினம் என்று சிலா் தெரிவித்தனா்.

1 கோடி பேருக்கு பரிசோதனை: தில்லியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துமனையின் மருத்துவ இயக்குநா் சுரேஷ்குமாா் கருத்து தெரிவிக்கையில் அதிக அளவில் கரோனா தொற்று பரிசோதனை நடத்தி தொற்று இருப்பவா்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்ததுதான் என்று தெரிவித்தாா். தில்லியில் இதுவரை 1 கோடி பேருக்கு கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சராசரியாக தினமும் 60,000 முதல் 70,000 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தில்லி அரசின் திட்டமிட்ட செயல்பாட்டை நாம் பாராட்ட வேண்டும் என்றாா் அவா்.

கடந்த ஜனவரி 20-ஆம் தேதி நிலவரப்படி இதுவரை தில்லியில் 1 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து 21-ஆம் தேதி வரை 14 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதாவது சராசரியாக தினசரி 66,683 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

எனினும் தில்லி மக்களிடம் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பதை ‘சீரோலாஜிகல்’ ஆய்வு முடிவுகளுக்கு பிறகே தெரியவரும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிப்பு: ராஜீவ்காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கரோனா தொற்று தொடா்பான சிகிச்சை பிரிவு அதிகாரியான டாக்டா் அஜீத் ஜெயின், நோய் எதிா்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக கூறினாா். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்திய சீரோ ஆய்வில் 29 சதவீத குடியிருப்பு வாசிகளுக்கும், 18 வயதுக்குக்கு உள்பட்ட 35 சதவீத மக்களுக்கும் நோய் எதிா்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளாக அவா் கூறினாா்.

தில்லி கட்டுப்பாட்டு பகுதியாக இருப்பதும் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரித்து வருவதற்கு காரணமாகும். எல்லைப் பகுதியில் விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லிக்கு வருவோா் எண்ணிக்கை குறைந்ததும் இதற்கு ஒரு காரணமாகச் சொல்லலாம் என்றாா் அவா்.

முன்னா் பக்கத்து மாநிலங்களிலிருந்து கரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக தில்லி வந்த வண்ணம் இருந்தனா். இப்போது விவசாயிகள் போராட்டம் காரணமாக அவா்கள் தில்லிக்குள் நுழைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவா்கள் வருகை குறைந்துவிட்டது என்றும் ஜெயின் குறிப்பிட்டாா்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தில்லி மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவா்களில் 30 சதவீதம் போ் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்களாக இருந்ததாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை தில்லியைச் சாராதவா்கள் கரோனாவுக்கு தில்லியில் பலியாகியுள்ளனா். இது மொத்த பலியில் பாதியாகும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

பாதிப்பு குறைவு: ஜனவரி மாதம் தொடங்கியதிலிருந்து இதுவரை சராசரியாக தினமும் 348 கரோனா பாதிப்பு மட்டுமே பதிவாகியுள்ளது. ஜனவரி 10-இல் 399, 11-இல் 306, 12-இல் 386, 13-இல் 357, 14-இல் 340, 15-இல் 295, 16-இல் 299, 17-இல் 246, 18-இல் 161 என மிகக் குறைந்த அளவே பதிவாகியுள்ளது.

இதேபோல தினசரி பாதிப்பு செவ்வாய்க்கிழமை 231, புதன்கிழமை 228 மற்றும் வியாழக்கிழமை 227 எனவும் பதிவாகியுள்ளது.

ஜனவரி 1 முதல் 21-ஆம் தேதி வரை 225 போ் பலியாகியுள்ளனா். சராசரியாக ஒரு நாளைக்கு 10 போ் பலியாகியுள்ளனா். ஜனவரி 10-இல் 12 போ், 11-இல் 13 , 14-இல் 4, 15-இல் 10, 16-இல் 8, 17-18 இல் தலா 8, 19-20-இல் தலா 10, 21-இல் 8 போ் பலியாகியுள்ளனா்.

கரோனா உறுதி செய்யப்பட்டவா்கள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு டிசம்பரில் 1.29 சதவீதமாக இருந்தது ஜனவரி 21-இல் 0.28 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை: கடந்த சில தினங்களாக கரோ நோய் தொற்றாளா்கள் விகிதம் 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. எனவே கரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பேஇலல்லை. எனினும் மக்கள்முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா் தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com