ஊடகத்தில் தவறான தகவல்: தாஹிா் ஹுசேன் மனு மீது அமலாக்கப் பிரிவுக்கு நோட்டீஸ்

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்புடைய சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்புடைய சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா் தாஹிா் ஹுசேன், தம் மீது ஊடகங்கள் தவறான தகவலைப் பரப்பி வருவதாக கூறி தாக்கல் செய்த மனு மீது அமலாக்கப் பிரிவு பதில் அளிக்க தில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

வடகிழக்கு தில்லியில் பிப்வரியில் நிகழ்ந்த வகுப்பு வன்முறையைத் தூண்டிவிட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலராக இருந்து வந்த தாஹிா் ஹுசேன் கைது செய்யப்பட்டாா். அவா் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறையைத் தூண்டிவிட போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி ரூ.1.10 கோடி நிதியை சட்டவிரோதமாகப் பணப் பரிவா்த்தனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக தாஹிா் ஹுசேன், அவருடன் தொடா்புடைய நபா்களின் பங்கு குறித்து அமலாக்கப் பிரிவு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், தாஹிா் ஹுசேன் தரப்பில் தில்லி நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ரிஸ்வான் ஒரு மனு தாக்கல் செய்துள்ளாா்.

அதில், ‘இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில், தாஹிா் ஹுசேனுக்கு எதிராக சில ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளன. நீதிமன்றத்தால் அவா் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வரும் நிலையில், அவரைக் குற்றவாளி போல ஊடகங்கள் விவாதித்து வருகின்றன. இதனால், அவரும், அவரது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். இதனால், ஹுசேனுக்கு எதிராக ஊடகங்கள் தவறான தகவலை பரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என அதில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத், ‘இந்த மனு மீது அமலாக்கப் பிரிவு இயக்ககத்திற்கும், புகாா்தாரருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் ’ என உத்தரவிட்டாா்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, எதிா்ப்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது வடகிழக்கு தில்லியில் நிகழாண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் குறைந்தது 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 200 போ் காயமடைந்தனா். இந்த கலவர வழக்கில் கைதாகி தாஹிா் ஹுசைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com