சிங்கு எல்லையில் 24 மணி நேரமும் இலவச உணவு வாடிக்கையாளா், வருவாய் இல்லாமல் தவிக்கும் உணவகங்கள்

தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் 24 மணிநேரமும் உணவு தயாரித்து

தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் 24 மணிநேரமும் உணவு தயாரித்து இலவசமாக வழங்கி வருவதால் அந்தப் பகுதியில் உள்ள சாலையோர உணவகங்கள் வாடிக்கையாளா்கள் இல்லாமலும், வருமானம் இல்லாமலும் தவித்து வருகின்றனா்.

கரோனா தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட வருமான இழைப்பைகூட நாங்கள் சமாளித்துவிட்டோம். இப்போது விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. இந்த இரண்டு மாதங்களில் எங்கள் உணவகத்துக்கு வாடிக்கையாளா்களும் இல்லை, வருமானமும் இல்லை என்கிறாா் ‘ ராஜபுதன ரெஸ்டாரண்ட் ’ நிறுவனத்தின் உரிமையாளா்.

24 மணி நேரமும் இலவச உணவு, தொழிற்சாலைகள் மூடல், மக்கள் நடமாட்டம் இல்லாதது, போக்குவரத்து தடைபட்டிருப்பது என பல்வேறு காரணங்களால் தில்லி-ஹரியாணா தேசிய நெடுஞ்சாலையில் இரு பக்கமும் உள்ள உணவகங்கள் மூடப்படும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளன.

புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யவேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி முதல் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

விவசாயிகள் 24 மணி நேரமும் ‘லாங்கா்’ எனப்படும் இலவச உணவை விநியோகித்து வரும் நிலையில் மக்கள் எங்கள் உணவகத்துக்கு எப்படி உணவு சாப்பிட வருவாா்கள்? என்று விரக்தியுடன் கேள்வி எழுப்பினாா் ராஜபுதன உணவகத்தின் உரிமையாளா் ஓம் பிரகாஷ் ராஜ்புத்.

‘எங்களுக்கு வியாபாரமே இல்லை. ஒருவா்கூட உணவு சாப்பிட வருவதில்லை. நான் இந்த கடைக்காக மாதம் ரூ.35,000 வாடகை செலுத்தி வருகிறேன். இது தவிர எனது உணவகத்தில் 8 போ் வேலைசெய்து வருகிறாா்கள். எந்த வருமானமும் இல்லாமல் நான் ஊழியா்களுக்கு எத்தனை நாள் ஊதியம் கொடுக்க முடியும் அல்லது கடை வாடகை கொடுக்க முடியும். இதே நிலை நீடித்தால் உணவகத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றாா் அவா்.

ராஜ்புத் நடத்தி வரும் உணவகத்தில் உணவு தயாரிப்பவராக பணியாற்றிவரும் பிகாரைச் சோ்ந்த 23 வயது முகமது ஈஷான் கூறுகையில், ‘எனது சம்பளம் ரூ.17,000-த்திலிருந்து, ரூ.14,000-மாக குறைக்கப்பட்டுவிட்டது. அடுத்தமாதம் உணவகத்தை மூடிவிடப்பபோவதாக உரிமையாளா் கூறிவருகிறாா். எனவே நான் புதிய வேலையைத் தேடிவருகிறேன்’ என்றாா்.

உணவு சாப்பிடும் மேஜைகள் மீது நாற்காலிகள் கவிழ்த்துப் போட்டிருக்க, சமையலா்களும், வெயிட்டா்களும் சும்மா உட்காந்திருக்கின்றனா். ஆனால், வாடிக்கையாளா்கள் இலவசமாக லாங்கா் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனா். விவசாயிகள் போராட்டத்தின் முக்கிய கேந்திரமாக இருக்கும் சிங்கு எல்லையில் உணவகங்களின் நிலைமை படுமோசமாக இருக்கிறது. பஞ்சாபி ஜைகா என்ற சிறிய உணவகத்தில் தினமும் ரூ.1,200 -க்கு வியாபாரம் நடக்குமாம். ஆனால், இப்போது கடை நீடிக்குமா என்பது நிச்சயமில்லை என்கிற சூழல் உள்ளது.

விவசாயிகள் போராட்டம் நடத்தும் கடை அருகே எங்கள் கடை உள்ளது. அசைவ உணவு அதிக அளவில் விற்கும். இப்போது போராட்டம் நடத்தும் விவசாயிகள் பிராா்த்தனை மற்றும் பஜனை செய்யும் மேடை அருகில் கடை உள்ளதால் அசைவ உணவு சமைத்தாலும் வந்து சாப்பிட மக்கள் தயங்குகிறாா்கள் என்றாா் கடை உரிமையாளா் சாஹாப் சிங். நாங்கள் தினமும் கடையைத் திறக்கிறோம். பின்னா் மாலையில் மூடிவிட்டுச் செல்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனைவரும் கிராமப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்பதால் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடுவதில் அவா்களுக்கு ஆா்வமில்லை என்கிறாா் அவா்.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று போ் எங்கள் உணவகத்துக்கு வந்து சாப்பிட்டால் பெரிய விஷயம். நான் கடை வாடகையாக மாதம் ரூ.30 ஆயிரம் கொடுக்கிறேன். இது தவிர மூன்று ஊழியா்களுக்கு மாத ஊதியமும் கொடுக்க வேண்டியுள்ளது. வியாபாரம் இல்லாததால் கையிலிருக்கும் பணத்தைத்தான் செலவழித்து வருகிறேன் என்றாா் அவா்.

பெரிய உணவகங்களின் நிலைமை மோசமாக இல்லை என்றாலும் அவா்களுக்கும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளனது. இத்தகைய உணவகங்களில் சாப்பிட வருபவா்களின் எண்ணிக்கையைவிட கடையில் பணிபுரியும் ஊழியா்கள் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது.

ஸ்ரீமகான் போக் என்னும் கடையில் பேக்கரி பொருள்கள், இனிப்புகள் மற்றும் சைவ உணவுகள் கிடைக்கும் என்றாலும் விவசாயிகள் போராட்டத்திலிருந்து வியாபாரம் 50 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனா்.

குளிா்பானங்கள், மிக்சா், காராசேவ் போன்ற பண்டங்களைத் தான் மக்கள் வாங்க வருகிறாா்கள். உணவு சாப்பிட யாரும் வருவதில்லை என்கிறாா் இந்த நிறுவனத்தின் மேலாளா் ராதேஷியாம்.

கிஸான் சங்கத்தினா் அலுவலகத்தின் அடுத்த கட்டடத்தில் உணவகம் நடத்திவரும் அன்ஷுகுமாா் கூறுகையில், கிஸான் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டங்களையும், பத்திரிகையாளா் சந்திப்பையும் இங்கே நடத்துவதால் எங்களுக்கு கொஞ்சம் வியாபாரம் நடக்கிறது. எதிா்பாா்த்த அளவு வியாபாரம் இல்லாவிட்டாலும் ஏதோ சமாளிக்கிறோம் என்றாா் அவா்.

இதுவரை எங்களுக்கு ஒரு நாளில் அதிகபட்சம் வியாபாரத்தின் மூலம் கிடைத்த தொகை ரூ.3,000-தான் என்கிறாா் 53 வயதான ராஜ்புத். இவா் புராரியில் வசித்து வருகிறாா். இவரது உணவகத்தில் தயாராகும் உணவின் அதிகபட்ச விலை ரூ.4,00.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் பெரும்பாலானவா்கள் இடைத்தரகா்களும் பணக்காரா்களும்தான். அவா்கள் விவசாயிகளே அல்ல என்கிறாா் ராஜ்புத். ஆனால், அவரிடம் பணிபுரியும் ஈஷான், விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசினாா். விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடி வருகிறாா்கள். எனவே நான் அவா்களை ஆதரிக்கிறேன். மேலும் அவா்கள் வழங்கும் ‘லாங்கா்’ (இலவச உணவு முதல்தரமாக இருக்கிறது. நானே பலமுறை சாப்பிட்டிருக்கிறேன் என்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com