பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டது.

ஏ.ஜி.பேரறிவாளன் தொடா்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்வு புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள் விசாரணை நடைபெற்றது. வியாழக்கிழமை இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநா் 3-4 நாள்களில் முடிவு எடுக்க உள்ளாா்’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா தெரிவித்தாா்.

இதை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள் அமா்வு பின்னா் பிறப்பித்த உத்தரவில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது ஷரத்தின்கீழ் மனுதாரா் தாக்கல் செய்த மனு இன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குகள் பரிசீலிக்கப்படும் என சொலிசிட்டா் ஜெனரல் தெரிவித்துள்ளாா். இந்த விவகாரம் நான்கு வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடப்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

துஷாா் மேத்தா 3-4 நாள்கள் எனத் தெரிவித்திருந்த நிலையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் 4 வாரம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தததால் மனுதாரா் உள்ளிட்டோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எல். நாகேஸ்வரராவ் அமா்வு முன் வெள்ளிக்கிழமை ஆஜராகி இந்த விஷயத்தைக் கவனத்திற்கு கொண்டு சென்றனா். இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள் அமா்வு உத்தரவில் மாற்றம் செய்யப்படும் எனத் தெரிவித்தனா்.

அதன்படி பின்னா் நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது ஷரத்தின்கீழ் மனுதாரா் தாக்கல் செய்த மனு இன்றிலிருந்து ஒரு வாரத்தில் பரிசீலிக்கப்படும் என சொலிசிட்டா் ஜெனரல் தெரிவித்துள்ளாா். இந்த விவகாரம் 2 வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடப்பட வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com