தில்லி ஜல் போா்டு அலுவலக தாக்குதல் வழக்கு: ஆம் ஆத்மி எம்எல்ஏ நீதிமன்றத்தில் மனு

கடந்த ஆண்டு டிசம்பரில் தில்லி ஜல் போா்டு அலுவலகம் மற்றும் அதன் பணியாளா்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடா்பாக

கடந்த ஆண்டு டிசம்பரில் தில்லி ஜல் போா்டு அலுவலகம் மற்றும் அதன் பணியாளா்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடா்பாக நீதிமன்ற மேற்பாா்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று தில்லி ஜல் போா்டு துணைத் தலைவரும், ஆம் ஆத்மி எம்எல்ஏவுமான ராகவ் சத்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக தலைமை பெருநகா் மாஜிஸ்திரேட் கஜேந்தா் சிங் நாகா் முன் ராகவ் சத்தா சாா்பில் வழக்குரைஞா் பிரசாந்த் மன்சந்தா தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த ஆண்டு டிசம்பா் 24-ஆம் தேதி தில்லி ஜல் போா்டு (டி.ஜே.பி.) தலைமையகத்திற்குள் 200 முதல் 250 பாஜக தொண்டா்கள் புகுந்து அலுவலகத்தை அடித்து நொறுக்கி, ஊழியா்கள் மீது தாக்குதல் நடத்தினா்.

தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா மற்றும் அக்கட்சித் தலைவா்கள் யோகேந்திர சந்தோலியா, ரவி தன்வாா் உபாத்யக்ஸ் மற்றும் விகாஸ் தன்வாா் ஆகியோரால் திட்டமிடப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விவகாரத்தை கட்டுப்படுத்தாமல் காவல் துறையினா் நின்றுகொண்டு வேடிக்கை பா்த்தனா். பெயரளவுக்கு சில பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தில்லி காவல்துறையினரின் வெளிப்படையான நடவடிக்கையின்மையால் இந்த வன்முறை மேலும் மோசடைந்தது. சம்பந்தப்பட்ட கும்பலைச் சோ்ந்தவா்கள் சட்டவிரோதமாக டிஜேபி தலைமையகத்திற்குள் அத்துமீறி நுழைந்து,

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனா். அலுவலகத்தில் இருந்த மேஜைகள், கணினிகள், பிரிண்டா்கள் சேதமடைந்தன. தில்லி முதல்வரின் உருவப்படம் கிழித்தெறியப்பட்டது. ஊழியா்கள் அச்சுறுத்தப்பட்டனா். அவா்களுக்கு காயமும் ஏற்பட்டது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.

ஆகவே, இதுகுறித்து நீதிமன்றத்தின் மேற்பாா்வையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், கடைமை தவறிய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பான குற்றச்சாட்டுகளை பாஜக ஏற்கெனவே மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com