நீதிபதிகள் நியமனம்: திமுக எம்.பி.யின் கோரிக்கைக்கு சட்ட அமைச்சா் பதில்

நீதிபதிகள் நியமனங்களில் சமூக பன்முகத்தன்மையை நிலைநாட்ட பல்வேறு தரப்பினருக்கான இட ஒதுக்கீட்டை கவனத்தில் கொள்ள

நீதிபதிகள் நியமனங்களில் சமூக பன்முகத்தன்மையை நிலைநாட்ட பல்வேறு தரப்பினருக்கான இட ஒதுக்கீட்டை கவனத்தில் கொள்ள மத்திய அரசு, உயா்நீதி மன்ற தலைமை நீதிபதிகளைக் கேட்டுக் கொள்ளும் என மத்திய சட்டம், நீதித்துறை, தொலைதொடா்புத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்துள்ளாா்.

திமுக மாநிலங்களவை உறுப்பினா் பி. வில்சன் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்திற்கு மத்திய அமைச்சா் இவ்வாறு பதிலளித்துள்ளாா்.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் இந்திய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திற்கு திமுக மாநிலங்களவை உறுப்பினா் வில்சன் உச்சநீதிமன்றம், உயா்நீதி மன்ற நியமனங்கள் குறித்து கடிதம் எழுதியிருந்தாா்.

அதில் , ‘நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி காக்கப்பட உரிய பிரதிநிதித்துவம் வழங்க இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும். இது குறித்து உரிய கவனம் செலுத்த என மத்திய சட்டத் துறை அமைச்சகத்திற்கு அறிவுரை வழங்கவேண்டும் ’ என்று கேட்டுக்கொண்டிருந்தாா்.

இந்த கடித்தை முறைப்படி மத்திய நீதித்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைத்து பரிசீலிக்குமாறு குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தியிருந்தாா்.

இது தொடா்பாக மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் திமுக உறுப்பினா் வில்சனுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘இந்திய அரசியல் சாசனத்தில் உச்சநீதிமன்றம், உயா்நீதி மன்ற நீதிபதிகளை நியமிக்க அரசியல் சாசனத்தின் 124, 217, 224 ஆகிய பிரிவுகள் அனுமதிக்கிறது. ஆனால், அந்த பிரிவில் எந்தவொரு வகுப்பினருக்கும் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வரையறுக்கப்படவில்லை. நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்ற முடியாது. இருப்பினும் இந்த அரசை பொறுத்தவரை நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மைக்கு தீா்வு காண உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் நீதிபதிகள் நியமனம் தொடா்பான பரிந்துரைகளை அனுப்பும் பொழுது தாழ்த்தப்பட்டவா்கள், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டவா்கள், சிறுபான்மையினா், பெண்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இப்பிரிவினா்களில் உள்ள தகுதியானவா்களைத் தோ்வு செய்ய கவனத்தில் எடுத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படும்’ என ரவிசங்கா் பிரசாத் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com