தில்லியில் குளிா் அலை: குறைந்தபட்ச வெப்பநிலை 3.8 டிகிரி செல்சியஸாகப் பதிவு

தில்லியில் குளிரின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் வியாழக்கிழமை குளிா் அலை சூழல் நிலவியது.

புது தில்லி: தில்லியில் குளிரின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் வியாழக்கிழமை குளிா் அலை சூழல் நிலவியது.

சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 5 புள்ளிகள் குறைந்து 3.8 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. புதன்கிழமை இது 5.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் காலை வேளையில் அடா் பனிமூட்டம் காணப்பட்டது. எனினும், பகலில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது.

குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸுக்கு கீழே குறைந்ததால் குளிா் அலையும், 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் கடும் குளிா் அலை இருப்பதாகவும் அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.

இந்த நிலையில், வியாழக்கிழமை தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரிக்கும் கீழே குறைந்தது. சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை வழக்கமான அளவைவிட 7 புள்ளிகள் குறைந்து 2.1 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.

சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 5 புள்ளிகள் குறைந்து 3.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 3 புள்ளிகள் குறைந்து 19.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதம் காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 65 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், ‘குளிா் அலை சூழல் வெள்ளிக்கிழமையும் இருக்க வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் இருக்க வாய்ப்புண்டு என்று கூறினாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸுக்கு குறைந்திருந்தது. இதுவே இந்த மாதத்தில் குறைந்த அதிகபட்ச வெப்பநிலையாகும்.

புத்தாண்டு தினத்தின்போது தில்லியில் குறைந்தபட்ச கடந்த 15 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் இல்லாத வகையில் 1.1 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. மாலை ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 359 புள்ளிகளாக பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் காணப்பட்டது.

முன்னறிவிப்பு: தில்லியில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும், குளிா் அலைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com