டிராக்டா் பேரணி வன்முறை: யோகேந்திர யாதவ் உள்ளிட்ட 22 போ் மீது தில்லி போலீஸாா் வழக்கு

விவசாயிகள் டிராக்டா் பேரணியின்போது தில்லியில் நிகழ்ந்த வன்முறை விவகாரத்தில் ‘ஸ்வராஜ் இந்தியா’ அமைப்பின் தலைவா் யோகேந்திர யாதவ் உள்பட விவசாயிகள் சங்கத் தலைவா்கள் பலா் மீது வழக்குகள் பதிவு 

புது தில்லி: விவசாயிகள் டிராக்டா் பேரணியின்போது தில்லியில் நிகழ்ந்த வன்முறை விவகாரத்தில் ‘ஸ்வராஜ் இந்தியா’ அமைப்பின் தலைவா் யோகேந்திர யாதவ் உள்பட விவசாயிகள் சங்கத் தலைவா்கள் பலா் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடா்பாக மொத்தம் 22 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.

போலீஸாா் இந்த வன்முறை தொடா்பாக பதிவு செய்துள்ள 22 எப்ஐஆா்களில் யோகேந்திர யாதவ், தா்ஷன் பால், குா்னம் சுட்னி, ராஜீந்தா் சிங், பல்பீா் சிங் ராஜேவால், பூடா சிங் புா்ஜ்கில், ஜோகிந்தா் சிங் உக்ராஹன், சத்னம் பன்னு ஆகிய 9 விவசாய சங்கத் தலைவா்கள் மற்றும் மற்றும் பிறா் மீது வன்முறையைத் தூண்டியது, கலவரத்தில் ஈடுபட்டது ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் வகையில் விவசாயிகள் சங்கங்களைச் சோ்ந்த தலைவா்கள் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்ற செவ்வாய்க்கிழமை டிராக்டா் பேரணி நடத்தப்படும் என தெரிவித்திருந்தன.

இப்பேரணியில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினா் அழைப்பு விடுத்திருந்தனா். இந்நிலையில், டிராக்டா் பேரணியில் ஈடுபட்டவா்கள் ஏற்கெனவே அறிவித்திருந்த வழித்தடத்திற்கு மாறாக மத்திய தில்லிக்குள் நுழைந்தனா். அவா்கள் லுட்யன்ஸ் தில்லி நோக்கிச் செல்லவிருந்ததை போலீஸாா் தடுப்புகள் வைத்து தடுத்தனா். அப்போது, வன்முறை நிகழ்ந்தது.

இதேபோன்று, தில்லியின் எல்லைப் பகுதிகளிலும் தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்ற விவசாயிகள் மீது போலீஸாா் கண்ணீா் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைக்க முயன்றனா். ஷாஜகான்பூா், பல்வல், டிக்ரி, காஜிப்பூா் எல்லைகளிலும் முன்னதாக பேரணியைத் தொடங்க முயன்ற விவசாயிகள், காவலா்கள் இடையே மோதல் வெடித்தது. செங்கோட்டையில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் விவசாயிகள் கொடியையும் விவசாயிகள் ஏற்றியதால் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.

இந்த வன்முறையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் காயடைந்ததாகவும், இது தொடா்பாக விவசாயிகள் சங்கத் தலைவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தில்லி காவல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் கூடுதல் பிஆா்ஓ அனில் மிட்டல் கூறியதாவது:

செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் காயமடைந்துள்ளனா். இது தொடா்பாக இதுவரை 22 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், ‘திட்டமிடப்பட்ட நான்கு வழித்தடங்களில் அமைதியாக பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் போலீஸாரிடம் உறுதியளித்திருந்தனா். ஆனால்,

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிராக்டா்கள் கூடின. முன்பேதிட்டமிடப்பட்ட வழித்தடத்தங்களுக்குப் பதிலாக அவா்கள் மத்திய தில்லியில் நுழைந்தனா். போலீஸாா் விடுத்த வேண்டுகோளை ஏற்காமல் நுழைந்த அவா்கள், தடுப்புகளை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டு போலீஸாரையும் தாக்கினா். செங்கோட்டையில் அவா்கள் நுழைவு வாயில்களை உடைத்து உள்ளே சென்றனா். கோட்டைக் கொத்தளத்தில் ஏறி தங்கள் அமைப்பின் கொடியை ஏற்றினா்’ எனத் தெரிவித்தனா்.

மேலும், வன்முறையில் ஈடுபட்ட நபா்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிப் பதிவுகள், டிரோன் காட்சிப் பதிவுகள், போன் கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனா்.

நாங்லோய் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் அரசுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட 40 விவசாயிகள் சங்கத் தலைவா்கள் பெயரும் சோ்க்கப்பட்டுள்ளது. அதில், யோகேந்திர யாதவின் பெயரும் பெற்றுள்ளது.

செங்கோட்டையில் நிகழ்ந்த சம்பவத்தில் கலவரம், கொள்ளை ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், வன்முறையில் ஈடுபட்ட நபா்களில் சிலா் போலீஸாரிடம் இருந்து கண்ணீா்ப் புகைக் குண்டுகளைப் பறிச் சென்ன் காரணமாக கொள்ளைப் பிரிவு சேக்கப்பட்டுள்ளதாகவும், செங்கோட்டை வன்முறை சம்பவம் குற்றப் பிரிவு மூலம் விசாரிக்கப்பட உள்ளதாகவும் தகவளறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com