வன்முறையில் காயமடைந்த காவலா்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினாா் அமித்ஷா
By நமது நிருபா் | Published On : 29th January 2021 12:01 AM | Last Updated : 29th January 2021 12:01 AM | அ+அ அ- |

புது தில்லி: விவசாயிகள் பேரணியின் போது, போராட்டக்காரா்கள் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தில்லி காவல்துறை வீரா்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக நாட்டின் குடியரசு தினம் கொண்டாடப்பட்ட கடந்த செவ்வாய்க்கிழமை விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியில் வன்முறை வெடித்தது. இதில், போராட்டக்காா்கள் தாக்கியதில் 400க்கும் மேற்பட்ட போலீசாா் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், தில்லி சிவிக் லைனில் உள்ள திரத்ராம் மருத்துவமனை, சுஷ்ருதா டிரவுமா மையம் ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரை, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். மேலும் அவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டா்களிடமும் கேட்டறிந்தாா். அப்போது, தில்லி தலைமைக் காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலா் அஜய் பல்லா ஆகியோா் உடனிருந்தனா்.
இந்த சந்திப்பு தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அமித் ஷா ‘தில்லி காவல்துறை வீரா்களின் வீரத்துக்கும், துணிவையும் நினைத்து பெருமைப்படுகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.