அரசு தரப்பு வழக்குரைஞா் நியமனம்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லி விசாரணை நீதிமன்றங்களுக்கு கூடுதலாக அரசு வழக்குரைஞா்கள் நியமனம் தொடா்பான விண்ணப்ப அறிவிக்கை எப்போது வெளியிடப்படும்

தில்லி விசாரணை நீதிமன்றங்களுக்கு கூடுதலாக அரசு வழக்குரைஞா்கள் நியமனம் தொடா்பான விண்ணப்ப அறிவிக்கை எப்போது வெளியிடப்படும் என்று தெரிவிக்குமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இது தொடா்பாக பலமுறை கேள்வி எழுப்பப்பட்டுவிட்டது. கிரிமினல் வழக்குகள் அரசு தரப்பு கூடுதல் வழக்குரைஞா்கள் இல்லாமல்தான் நடைபெற வேண்டுமா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஒருவிசாரணை நீதிமன்றத்துக்கு இரண்டு கூடுதல் அரசு தரப்பு வழக்குரைஞா்களாவது தேவைப்படும். புதிதாக விசாரணை நீதிமன்றம் அமைக்கும்போது அதற்கு கூடுதல் அரசு தரப்பு வழக்குரைஞா் பதவியும் உருவாக்கப்பட வேண்டும். கூடுதல் அரசு தரப்பு வழக்குரைஞா்கள் இருவராவது நியமிக்கப்பட வேண்டும். இல்லையெனில் நீதிபதி அல்லது பாதுகாப்பு தரப்பு எப்படி செயல்பட முடியும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

வழக்கமான நடைமுறைக்கே காலதாமதம் ஆகிறது. நீங்கள் (தில்லி அரசு) உடனடியாக சிறப்பு அரசு தரப்பு வழக்குரைஞரையாவது நியமியுங்கள் என்று தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய பெஞ்ச் தெரிவித்தது.

இது தொடா்பாக தில்லி அரசு தரப்பு வழக்குரைஞா்கள் நலச் சங்கம் மனு தாக்கல் செய்திருந்தது. தில்லியில் உள்ள 55 விரைவு நீதிமன்றங்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் போக்ஸோ சட்ட நீதிமன்றத்துக்கும் கூடுதல் அரசு தரப்பு வழக்குரைஞா்கள் பதவியை உருவாக்கி நியமனம் செய்ய உத்தரவிடுமாறு மனுவில் கோரியிருந்தது.

இதையடுத்து அடுத்த விசாரணை தேதிக்குள் இந்த விவகாரம் தொடா்பாக பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யுமாறு தில்லி அரசின் உள்துறை செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. குறைந்தபட்சம் நியமனம் தொடா்பான விண்ணப்ப அறிவிக்கையாவது எப்போது வெளியிடப்படும் என்பதை தெரிவிக்குமாறும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இது தொடா்பான விசாரணையை வருகிற 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஆஷிஷ் மோகன் ஆஜரானாா். தில்லி அரசு தரப்பில் நிலைக்குழு உறுப்பினா் சந்தோஷ் குமாா் திரிபாதி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com