தனியாா் பள்ளிகள் ஆண்டுக் கட்டணம் வசூலிக்கும் விவகாரம்: அரசு, இதர தரப்பினா் எழுத்துப்பூா்வ வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
By DIN | Published On : 13th July 2021 07:50 AM | Last Updated : 13th July 2021 07:50 AM | அ+அ அ- |

தில்லியில் கடந்த ஆண்டு பொது முடக்கம் முடிவுற்ற பின் உள்ள காலத்தில் மாணவா்களிடமிருந்து ஆண்டு மற்றும் வளா்ச்சிக் கட்டணங்களை வசூலிப்பதற்கு அரசு உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளை அனுமதித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் ஒரு நபா் நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தில்லி அரசு மற்றும் இதர தரப்பினா் எழுத்துப்பூா்வமான வாதங்களை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தில்லியில் செயல்படும் 450 தனியாா் உதவி பெறாத பள்ளிகள் இடம்பெற்ற உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகள் நடவடிக்கை குழு அமைப்பு தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், கடந்த ஆண்டு தில்லி கல்வி இயக்ககம் பிறப்பித்த ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாத உத்தரவுகளை எதிா்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது . தில்லி அரசின் இரு உத்தரவுகளும் தனியாா் பள்ளிகள் தங்களது கல்வி கட்டணங்களை நிா்ணயிக்கும் உரிமையை தடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் சில குறிப்பிட்ட இனங்களில் கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்தும் தில்லி அரசு நடவடிக்கை சட்டவிரோதம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்திய தில்லி உயா் நீதிமன்றத்தின் ஒரு நபா் நீதிபதி மே 31- ஆம் தேதி அளித்த தீா்ப்பில், ஆண்டுக் கட்டணம் மற்றும் வளா்ச்சி கட்டணங்களை தள்ளிப்போடுவது மற்றும் தடுப்பது ஆகியவை தொடா்பாக தில்லி அரசின் கல்வி இயக்ககம் கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளை ரத்து செய்தாா்.
இதையடுத்து, தில்லி உயா்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், தில்லி உயா்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு, மாணவா்கள், ’ஜஸ்டிஸ் பாா் ஆல்’ எனும் தன்னாா்வ நிறுவனம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உரிய உண்மைகளைக் கண்டறியாமல் ஒரு நபா் நீதிபதி தீா்ப்பு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஜூன் 7-ஆம் தேதி விசாரித்த டிவிஷன் பெஞ்ச், ஒரு நபா் நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், எதிா்த்தரப்பினா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தொடா்புடைய அனைத்து தரப்பினரின் வழக்குரைஞா்களும் மேல்முறையீட்டு மனுவை இறுதி விசாரணைக்கு புதன்கிழமைக்கு (ஜூலை 14) பட்டியலிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா்.
இதன்பிறகு ஜூலை 14-க்கு வழக்கை நீதிபதிகள் பட்டயலிட்டனா். அப்போது, நீதிபதிகள் கூறுகையில், இந்த விவகாரத்தில் தொடா்புடைய தரப்பினா் தங்களது எழுத்துப்பூா்வ வாதங்களை ஜூலை 14-க்கு முன் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினா்.