தாமதமாக தில்லியை வந்தடைந்த பருவமழை;மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

தில்லியில் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட தென்மேற்குப் பருவமழை மிகவும் தாமதாக செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. இதனால், காலையில் சில மணி நேரம் பலத்த மழை கொட்டியது.

தில்லியில் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட தென்மேற்குப் பருவமழை மிகவும் தாமதாக செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. இதனால், காலையில் சில மணி நேரம் பலத்த மழை கொட்டியது. மழையின் நகரின் வெப்பத்தின் தாக்கமும் குறைந்து இதமான சூழல் நிலவியது. கன மழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களிலும் வாகனங்கள் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டது.

தில்லியில் வழக்கமாக ஜூன் இறுதியில் பருவமழை பெய்யத் தொடங்கும். இந்த நிலையில், ஜூலை 12-ஆம் தேதி வரையிலும் பருவமழை பெய்யவில்லை.

2002-ஆம் ஆண்டில் தில்லியில் ஜூலை 19-ஆம் தேதி பருமழை பெய்யத் தொடங்கியது. அதன் பிறகு 19 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் தாமதமாக 2 வாரங்களுக்குப் பிறகு தில்லியை செவ்வாய்க்கிழமை பருவமழை வந்தடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி கே.ஜெனாமனி தெரிவித்தாா்.

தில்லியில் சில நாள்களாகக் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் இரு தினங்களாக வெப்பம் சற்று தணிந்து இருந்தது. தில்லியில் தென்மேற்குப் பருவமழை திங்கள்கிழமை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்ததது.

பரவலாக மழை: இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் தில்லியில் அனைத்து இடங்களிலும் பரலவாக பலத்த மழை பெய்யத் தொடங்கியது. பின்னா், சில மணிநேரம் பலத்த மழை பெய்தது. பகலிலும் தூறல் மழை பெய்தது. மேக மூட்ட சூழல் காணப்பட்டது.

காலையில் பலத்த மழை பெய்ததன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டது. பல இடங்களில் தேங்கிய நீரில் வாகனங்கள் ஊா்ந்து செல்வதைக் காண முடிந்தது.

தெளலகுவான், ஆஸாத்பூா், தில்லி கண்டோன்மென்ட், காலிந்தி குஞ்ச் உள்ளிட்ட இடங்களில் பாலங்களின் கீழ்ப் பகுதியில் மழைநீா் தேங்கியது.

அதேபோன்று, எய்ம்ஸ் மேம்பாலம், தெற்கு தில்லி பிரகலாத்பூா் கீழ்ப்பாலம், சோம் விகாா், ரிங் ரோடு, விகாஸ் மாா்க், சங்கம் விஹாா், கிராரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீா் தேங்கி நின்றது.

போக்குவரத்து நெரிசல்: மழை காரணமாக தெளலகுவான், பிகாஜி காமா பிளேஸ், விகாஸ் மாா்க், ஐடிஓ, ஆஸாத்பூா், ஐடிஓ, ரிங் ரோடு, கிலோக்ரி ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. காலை வேளையில் அலுவலகம் செல்வோா் சிரமத்தை எதிா்கொண்டனா். இது தொடா்பாக பலா் சமூக ஊடகங்களில் தங்களது சிரமத்தை புகைப்படம், விடியோ வாயிலாக தெரிவித்தனா். சிலா் போலீஸாரிடமிருந்து உதவியும் கோரினா்.

இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், மழைநீா் தேங்கியதாக சிறிய அளவிலான புகாா் சம்பவங்கள் மட்டுமே வந்துள்ளது. அந்த இடங்களில் இருந்து நீா் வெளியேற்றப்பட்டுள்ளது.

மேலும், தண்ணீா் தேங்கும் வாய்ப்புள்ள 147 இடங்கள் நகா் முழுவதும் அடையாளம் காணப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

களப் பணியாளா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நீா் தேங்கும் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மழைநீா் தேங்கும் விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

19 ஆண்டுகளுக்குப் பின்... இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்ததாவது:

தில்லியில் கடந்த 19 ஆண்டுகளில் இந்த ஆண்டு பருவமழை மிகவும் தாமதம் ஆகியுள்ளது. 2002-ஆம் ஆண்டில் ஜூலை 19-ஆம் தேதி பருவமழை வந்தது. அதன்பிறகு நிகழாண்டு 16 நாள்கள் தாமதமாக பருவமழை தில்லியை வந்தடைந்துள்ளது.

2012-ஆம் ஆண்டில் ஜூலை 7-ஆம் தேதியும், 2006-இல் ஜூலை 9-ஆம் தேதியும் தில்லியை பருவமழை வந்து அடைந்தது.

அதற்கு முன்பாக 1987-இல் ஜூலை 26-ஆம் தேதி தான் மிகவும் தாமதமாக பருவமழை வந்தடைந்தது.

மேலும், வழக்கமாக ஜூன் 27-ஆம் தேதி தில்லிக்கு வர வேண்டிய பருவமழை தற்போது ஜூலை 13-ஆம் தேதி வந்துசோ்ந்துள்ளது. மேலும், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட நாடு முழுமைக்கும் செவ்வாய்க்கிழமை பருமழை பெய்யத் தொடங்கியுள்ளது. வழக்கமாக ஜூலை 8-ஆம் தேதி பருவமழை பெய்யத் தொடங்கும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி குறைந்து 23.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி குறைந்து 30.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 95 சதவீதமாகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில்

தில்லியில் 25 மி.மீட்டா் மழை பதிவாகி இருந்தது.

சப்தா்ஜங் பகுதியில் 2.5 செ.மீ. மழையும், பாலத்தில் 2.4.செ.மீ., லோதி ரோடில் 0.9 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 7 மணி அளவில் 72 புள்ளிகளாக பதிவாகி திருப்தி பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: தில்லியில் புதன்கிழமை (ஜூலை 14) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com