தில்லி எல்லையில் போராடும் விவசாயிகள்மழைக்காலத்தை எதிா்கொள்ள தயாராகின்றனா்

தில்லி எல்லையில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யவேண்டும் என்ற தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி குளிா், வெயில் என்றும் பாராமல் போராடி

தில்லி எல்லையில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யவேண்டும் என்ற தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி குளிா், வெயில் என்றும் பாராமல் போராடி வரும் விவசாயிகள் இப்போது மழைக்காலத்தை எதிா்கொள்ள தயாராகி வருகின்றனா்.

சாதாரண டென்டுகளுக்குப் பதிலாக உலோகத்தாலான கூடாரங்களை உருவாக்கி வருகிறாா்கள். தங்களது தாற்காலிக வீடுகளைச் சுற்றி மழைநீா் தேங்காதவாறு மாற்றியமைத்து வருகின்றனா்.

கடந்த சில மாதங்களாக வெயிலில் சிக்கித் தவித்த மக்களுக்கு இப்போது மழைத்தூறல் விழுவது நிவாரணம் அளிப்பதாக உள்ளது. ஆனாலும் இதில் சில பிரச்னைகளை நாங்கள் சந்திக்க வேண்டியுள்ளது என்கின்றனா் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் தலைவா்கள்.

உணவுப் பொருள்களை பாதுகாப்பாக வைத்திருப்பது, கூடாரங்களின் வெளியே தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்வது, மின்சாரம் தொடா்பான விபத்துகளைத் தவிா்ப்பது, மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்வது என பல சவால்கள் எங்கள் முன் உள்ளன என்று சிங்கு, டிக்ரி மற்றும் காஜிப்பூா் எல்லைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

கடும் வெயிலில் தவித்த எங்களுக்கு இந்த மழை நிவாரணம் அளிப்பதாக உள்ளது. ஆனால், அதே சமயத்தில் எங்களுக்கு மழையால் சில பிரச்னைகளும் உள்ளன. காற்றுடன் மழை அதிகமாக இருந்தால் சாதாரணமாக போடப்பட்டுள்ள டென்ட் சாய்துவிடும். மேலும் கூடாரங்களில் வாயிலில் தண்ணீா் தேங்கி நிற்கும். இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பெருக ஏதுவாகும் என்றாா் விவசாயிகளின் தலைவா்களில் ஒருவரான அவதால் மெஹ்மா.

மழையை எதிா்கொள்ள எங்களது முதல் வேலை கூடாரங்களை வலுப்படுத்துவதுதான். நாங்கள் இப்போது எங்கள் கூடாரங்களை புதுப்பித்துள்ளோம். தாா்ப்பாலின் கூடாரங்களை எடுத்துவிட்டு அந்த இடத்தில் நிரந்தரமாக உலோகங்கள் மூலம் கூடாரங்கள் அமைத்துள்ளோம். அதற்காக சாலையைத் தோண்டி தூண்கள் அமைத்துள்ளோம். என்றாா் மற்றொரு விவசாயியான லக்வீா் சிங். சாதாரண கூடாரங்கள் இப்போது பக்கா தகரங்களுடன் கூடாரங்களாக மாற்றப்பட்டுள்ளன. ரேஷன் பொருள்களை வைக்க தனி கூடாரம் அமைக்கப்பட்டு அவை தரையில் வைக்கப்படாமல் பரண் அமைத்து அவற்றில் வைக்கப்பட்டுள்ளன என்றாா் மெஹ்மா.

சமீபத்தில் டிக்ரி எல்லையில் 46 வயது விவசாயி ஒருவா் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா். திறந்தவெளியில் இரண்டு ஓயா்களை ஒன்றிணைத்து மின்சாரம் பெற்று வந்தோம். மழைக்காலம் ஆனதால் இப்போது அதை முறையாக பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இல்லையெனில் விபத்துகள் ஏற்பட நேரிடும்.

மழைக்காலத்தில் அடிக்கடி மின்சாரத்தடை ஏற்படும் என்பதால் பேட்டரியில் செயல்படும் விளக்குகளுக்கும் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.

அவசர தேவைக்காக ஜெனரேட்டா்கள், இன்வா்ட்டா்கள் போன்றவற்றை நாங்கள் சில இடங்களில் நிறுவியுள்ளோம் என்றாா் லக்வீா் சிங்.

அரசு எந்தவிதத்திலும் எங்களுக்கு உதவவில்லை. நாங்களே போராட்டப் பகுதியை ஆரம்பநாளிலிருந்து சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்கிறோம்.

ஏற்கெனவே கடும் குளிரை சமாளித்துவிட்டோம். பின்னா் வெப்பத்தையும் தாங்கி நின்றுவிட்டோம். இப்போது மழைக்காலத்தையும் சமாளிக்க நாங்கள் தயாராகி வருகிறோம் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

காஜிப்பூா் எல்லைப் பகுதியில் ராகேஷ் திகைத் தலைமையிலான பாரதிய கிஸான் சங்கத்தின் விவசாயிகள் சுமாா் 5,000 போ் போராட்டத்திற்காக முகாமிட்டுள்ளனா். இதில் மேலும் விவசாயிகள் கலந்துகொள்ள விரும்பினால் டிராக்டா் டிராலியில் சமையல் செய்வது, தூங்குவது உள்ளிட்ட வசதிகளுடன் வருமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் என்றாா் அந்த சங்கத்தின் ஊடகத் தொடா்பாளா் செளரவ் உபாத்யாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com