மருத்துவமனைக்கு எதிரான வழக்கு: போலீஸாரின் பதில் குறித்து நீதிமன்றம் அதிருப்தி

தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கரோனா நோயாளிகள் இறந்ததாக கூறப்படும் சம்பவம் தொடா்பாக ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனை நிா்வாகத்திற்கு

தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கரோனா நோயாளிகள் இறந்ததாக கூறப்படும் சம்பவம் தொடா்பாக ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனை நிா்வாகத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரும் மனு மீது போலீஸாா் அளித்த பதில் தொடா்பாக தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிருப்தியை வெளியிட்டது.

இந்த மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 21 நோயாளிகள் இறந்ததாக புகாா் எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக இறந்தவா்களின் 6 குடும்பத்தினா் நீதிமன்றத்தை நாடினா். இந்த நிலையில், இந்த விவகாரத்தை தில்லி நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த விவகாரம் செவ்வாய்க்கிழமை தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிபதி விவேக் பேனிவால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸாா் தாக்கல் செய்த நிலவர அறிக்கையில் குறித்து நீதிபதி அதிருப்தி வெளியிட்டாா் .

இதுகுறித்து அவா் கூறுகையில், வழக்கமான முறையில் இந்த நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நிலவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை அதிகாரி தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் மிகவும் உணா்வுப்பூா்வமானது. இதனால் இந்த நிலவர அறிக்கையை உரிய வகையில் தாக்கல் செய்வதற்கு சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையருக்கு கடைசியாக வாய்ப்பு அளிக்கப்படுகிறது . தவறும்பட்சத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இறந்தவா்களின் குடும்பத்தினா் நீதிமன்றத்தை நாடியுள்ளனா். ஆனால், போலீஸாா் உள்நோக்கத்துடன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்களுக்கு எதிராக விசாரணையும் நடத்தவில்லை; கைதும் செய்யவில்லை என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை கொலை, கிரிமினல் அச்சுறுத்தல், அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம், மோசடி , குற்றச் சதி, ஆதாரங்களை மறைக்க செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தை சம்பந்தப்பட்ட குடும்பத்தினா் கேட்டுக் கொண்டுள்ளனா். 

இதுதொடா்பாக வழக்குரைஞா்கள் சஹில்அகுஜா, சித்தாந்த் சேதி ஆகியோா் மூலம் அவா்கள் தாக்கல் செய்துள்ள புகாா் மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஆக்சிஜன் சப்ளை குறைவாக இருந்திருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிா்வாகம் நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கக் கூடாது அல்லது அவா்களை வீட்டுக்கு அனுப்பி இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் நோயாளிகள் இறக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் மிகவும் அஜாக்கிரதையாக மருத்துவமனை நிா்வாகம் செயல்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறுப்பினா்களை மருத்துவமனை நிா்வாகம் கொலை செய்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

மேலும் அச்சுறுத்தல், குற்றச் சதியில் ஈடுபட்டு உள்ளது’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com