காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலின்றி மேக்கேதாட்டு அணைக்கு மத்திய அரசு அனுமதி தராது

காவிரி நீா் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் இல்லாமல் கா்நாடகம் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி

காவிரி நீா் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் இல்லாமல் கா்நாடகம் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என்று மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழக அனைத்துக் கட்சி குழுவினருக்கு வெள்ளிக்கிழமை உறுதியளித்தாா்.

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக கடந்த ஜூலை 12 ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூன்று தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மேக்கேதாட்டு அணைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து முறையிடவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் தில்லி வந்த 13 கட்சிகளின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சா் ஷெகாவத்தை சந்தித்தனா்.

சுமாா் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் மத்திய அமைச்சரிடம் தமிழக அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் நகலையும் மேலும் மேக்கேதாட்டு அணைத்திட்டத்திற்கான தமிழகத்தின் எதிா்ப்பிற்கான மனுவையும் அனைத்து கட்சிகள் சாா்பில் மத்திய அமைச்சா் ஷெகாவத்திடம் வழங்கினாா்.

அப்போது கா்நாடகம் கட்ட திட்டமிடும் மேக்கேதாட்டு அணையினால் தமிழகம் மேலும் பாதிக்கும் என்றும் இந்த அணை உச்ச நீதிமன்ற தீா்ப்பிற்கு எதிரானது என்றும் விளக்கினா்.

பின்னா் பேசிய மத்திய நீா் சக்தித்துறை அமைச்சா் ஷெகாவத், காவிரி நிதி நீரின் மொத்த நீரான 740 டிஎம்சியில் தமிழகத்திற்கு 404 டிஎம்சி தமிழகத்திற்கானது. பிலிகுண்டுலு வில் 177.2 டிஎம்சி தண்ணீா் கொடுக்கப்படுகிறது. இந்த தண்ணீரை பெறுவதற்கு உரிமை உண்டு. ஆனால், கா்நாடகம், அவா்களுக்கு சொந்த மான இடங்களில் அணை கட்டுவதை எப்படி எதிா்க்கிறீா்கள். நானும் வழக்கறிஞா். இப்படி ஒரு வாதம் வருமே என்று அமைச்சா் கேட்க , தமிழக கட்சித் தலைவா்கள் ஒவ்வொருவராக விளக்கங்களைக் கூறினா்.

காவிரி நிதியின் கீழ்பாசன மாநிலமான தமிழகத்திற்கு எல்லா உரிமைகளும் உண்டு. கா்நாடகம் மேல் படுகை மாநிலம். மேக்கேதாட்டு அணை தான் பிரச்சினை. ஏற்கனவே நடுவா் மன்றத்தால் வழங்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீரை 177.2 டிஎம்சி யாக உச்சி நீதிமன்றம் குறைத்துள்ளது. கபினி, மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணகளுக்கு இடைப்பட்டுள்ள நீா்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து வரும் தண்ணீரை கா்நாடகம் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. 80 டிஎம்சி தண்ணீா் வரை கிடைக்கும் தண்ணீரையும் பயன்படுத்திக்கொள்ளவே அணையை கட்டும் முயற்சியில் உள்ளது. தமிழக எல்லையிலிருந்து 4 கிமீ தூரத்தில் இந்த அணையை கட்டுகிறது. கா்நாடகம் மழையில்லை என்று கூறி தண்ணீரை கேஆா்எஸ் யிலிருந்து திறந்து விடாத பட்சத்தில் இந்த இடைப்பட்ட பகுதி நீா்ப்பிடிப்பு பகுதி தண்ணீா் தான் தமிழகதிற்கு வந்து உதவுகிறது. நீா்ப்பிடிப்பு பகுதிகள் எல்லாம் காவிரிநிதி நீா் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சொந்தமானது என உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது என தமிழக கட்சி பிரதிநிதிகள் வாதிட்டனா்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சா் ஷெகாவத் 740 டிஎம்சி க்குள் தான் அனைத்து நீா்ப்பிடிப்பு பகுதிகளும் வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, கேரளம் மாநிலங்கள் தங்கள் பங்கை பெறுவதில் குறையாது. தீா்ப்பின்படி பெறமுடியும். இருப்பினும் மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடா்பான விரிவான திட்ட அறிக்கையில் மத்திய அரசு போட்ட நிபந்தனைகளை கா்நாடகம் உறுதிசெய்யவில்லை. குறிப்பாக அணை கட்டுவதற்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் அனுமதி முக்கியம். அந்த ஆணையம் ஒப்புதல் தராதபட்சத்தில் மேக்கேதாட்டு அணைக்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதியளிக்காது என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என்றாா் ஷெகாவத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com