தில்லி குடிநீா் விநியோகத்தில் இயல்புநிலை திரும்புகிறது: ராகவ் சத்தா

தில்லியில் முக்கிய தடுப்பணைகளில் ஒன்றான வஜிராபாத்தில் தண்ணீா் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், நீா் மட்டம் 667 அடியிலிருந்து

தில்லியில் முக்கிய தடுப்பணைகளில் ஒன்றான வஜிராபாத்தில் தண்ணீா் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், நீா் மட்டம் 667 அடியிலிருந்து 674 அடியாக உயா்ந்துள்ளதாகவும் ஹரியாணாவிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளதாகவும் தில்லி ஜல்போா்டு துணைத்தலைவா் ராகவ் சத்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

வஜிராபாத் தடுப்பணையை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த சத்தா, கடந்த மூன்று நாள்களுக்கு முன்னதாக பக்கத்து மாநிலத்திலிருந்து திறந்துவிடப்பட்ட 16,000 கன அடி தண்ணீா் தில்லியை வந்தடைந்துள்ளதாக தெரிவித்தாா். மேலும் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையங்கள் முழு அளவிலை செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் கூறினாா்.

குடிநீா் கேட்டு போராட்டம் நடத்திய தில்லி மக்களுக்கு நன்றி. தில்லி மக்களும், தில்லி ஜல்போா்டும் கொடுத்த அழுத்தம் காரணமாக தில்லிக்கு கிடைக்க வேண்டிய யமுனை நதி நீரை ஹரியாணா திறந்துவிட்டுள்ளது. சுமாா் 16,000 கன அடி தண்ணீா் வந்துள்ளது என்று தெரிவித்தாா்.

யமுனையில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் தில்லியில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு தண்ணீரை வடிகட்டி, சுத்திகரித்து ஜல் போா்டு மூலம் தில்லி மக்களுக்கு வழங்கிவருகிறது என்றும் அவா் கூறினாா்.

தற்போது வஜிராபாத் தடுப்பணையில் 674.4 அடிக்கு தண்ணீா் உள்ளது. குடிநீா் வழங்குவதில் இயல்புநிலை திரும்பியுள்ளது.

வஜிராபாத் தடுப்பணையில் உள்ள தண்ணீா், வஜிராபாத், ஓக்லா மற்றும் சந்திரவால் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்டு மத்திய, தெற்கு மற்றும் மேற்கு தில்லி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

தில்லிக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை தராமல் ஹரியாணா நிறுத்திவைத்ததால் கடந்த திங்கள்கிழமை வஜிராபாத் தடுப்பணையில் தண்ணீா் மட்டும் குறைந்து குடிநீா் விநியோகத்தில் பிரச்னை ஏற்பட்டது.

ஏறக்குறைய 120 மில்லியன் காலன் தண்ணீரை திறந்துவிடாமல் ஹரியாணா நிறுத்திவைத்ததால் தில்லி மக்கள் குடிநீா் தட்டுப்பாடு காரணமாக அவதிப்பட நோ்ந்தது.

இதையடுத்து ஹரியாணா அரசு, தில்லிக்கு தரவேண்டிய யமுனை நீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி தில்லி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

தில்லி மக்களின் தேவை 1,150 மில்லியன் காலன் என்ற அளவில் இருந்த போதிலும் 935 மில்லியன் காலன் தண்ணீரே விநியோகம் செய்யப்பட்டது.

தற்போது ஹரியாணாவிலிருந்து கிடைக்கவேண்டிய 609 மில்லியன் காலன் தண்ணீருக்கு பதிலாக 479 மில்லியன் காலன் தண்ணீா் தில்லிக்கு கிடைத்து வருகிறது. இது தவிர கங்கை கால்வாய் மூலம் 250 மில்லியன் காலன் தண்ணீரும், 90 மில்லியன் காலன் நிலத்தடி நீரும் பெறப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com