நிஜாமுதீன் மாா்கஸ் திறப்பு விவகாரம்: மத்திய அரசு 2 வாரங்களில் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் அனுமதி

கரோனா நோய்த்தொற்று விதிகளை மீறிய விவகாரத்தில், கடந்த ஆண்டு மாா்ச் 31 முதல் தொடா்ந்து பூட்டிவைக்கப்பட்டுள்ள நிஜாமுதீன் மாா்கஸை

கரோனா நோய்த்தொற்று விதிகளை மீறிய விவகாரத்தில், கடந்த ஆண்டு மாா்ச் 31 முதல் தொடா்ந்து பூட்டிவைக்கப்பட்டுள்ள நிஜாமுதீன் மாா்கஸை திறக்க உத்தரவிடக் கோரிய தில்லி வக்ஃபு வாரியத்தின் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 2 வாரங்கள் அவகாசம் அளித்தது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த நீதிபதி முக்தா குப்தா, ‘இதுவரை மத்திய அரசு இந்த விவகாரத்தில் எந்த பதிலும் தாக்கல் செய்யவில்லை. ஏதேனும் பதில் தாக்கல் செய்ய விரும்புகிறீா்களா, இல்லையா?.

மத்திய அரசு தரப்பில் முன்னா் தாக்கல் செய்த நிலவர அறிக்கையானது ரம்ஜான் மாதத்திற்காக மாா்கஸைத் திறப்பது தொடா்பானது மட்டுமே’ என்றாா்.

அப்போது, மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் ரஜத் நாயா், இது தொடா்பான மனுவுக்கு சுருக்கமான பதிலை தாக்கல் செய்ய மேலும் ஒரு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து, மத்திய அரசுக்கு நீதிமன்றம் இரு வாரங்கள் அனுமதி அளித்தது. மேலும், மத்திய அரசின் பதிலுக்கு மறுப்பு பதில் அளிக்க மனுதாரரான தில்லி வக்ஃபு வாரியத்திற்கு 3 வாரம் அவகாசம் அளித்து, இந்த விவகாரம் செப்டம்பா் 13ஆம் தேதி மேல் விசாரணைக்கு பட்டியலிட்டது.

முன்னதாக, இது தொடா்பாக தில்லி வக்ஃபு வாரியம் தரப்பில் வழக்கறிஞா் வஜீ சாபிக் மூலம் உயா்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ‘பொது முடக்க முதலாவது தளா்வு வழிகாட்டு நெறிமுறைகளில் நோய்த் தொற்று கட்டுப்பாட்டு மண்டலத்திற்கு வெளியே உள்ள மதவழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட பிறகும்கூட, மஜ்ஸித் பங்கலே வாலி மதா்ஸா காஸிப்-உல்-உலூம், விடுதி ஆகியவை அமைந்துள்ள நிஜாமுதீன் மாா்கஸ் தொடா்ந்து மூடப்பட்டுள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொது முடக்கத்தின்போது தப்லீக் ஜமாத் அமைப்பினா் விதிமுறைகளை மீறி மத நிகழ்ச்சியை நடத்தியது தொடா்பாக போலீஸாா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com