பரிசோதனை இன்றி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது பேரிடரானது: தில்லி உயா்நீதிமன்றம்

மருத்துவ ஆய்வு பரிசோதனையில்லாமல் தடுப்பூசி செலுத்துவது குறிப்பாக குழந்தைகளுக்கு செலுத்துவது பேரிடரானது என்று தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

மருத்துவ ஆய்வு பரிசோதனையில்லாமல் தடுப்பூசி செலுத்துவது குறிப்பாக குழந்தைகளுக்கு செலுத்துவது பேரிடரானது என்று தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

மேலும், பரிசோதனை முடிந்தவுடன் 18 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை உயா்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைளுக்கு கரோனா தடுப்பூசிக்கான மருத்துவ ஆய்வு பரிசோதனைகள் முடியும் தருவாயில் உள்ளன என்று தில்லி உயா் நீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

மேலும் இதற்காக அரசால் ஒரு கொள்கை உருவாக்கப்படும் என்றும் வல்லுநா்கள் அனுமதி அளிக்கும் போது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மூன்றாவது கரோனா நோய்தொற்று அலை வரக்கூடும் என்றும், இது குழந்தைகளை மிகவும் அதிகமாக பாதிக்கும் என்றும் அஞ்சப்படுவதால் 12 வயது முதல் 17 வயது வரையிலான பிரிவினருக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மைனா் சிறாா் சாா்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், ’18 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசிக்கான மருத்துவ ஆய்வு பரிசோதனைகள் முடியும் தருவாயில் உள்ளன’ என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில் ’மருத்துவ ஆய்வு பரிசோதனைகள் முடிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், பரிசோதனை ஆய்வு இல்லாமல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டால் அது ஒரு பேரிடராக இருந்துவிடும். அதனால், பரிசோதனைகள் முடிந்த உடனேயே குழந்தைகளுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஒட்டுமொத்த நாடே இதற்காக காத்திருக்கிறது’ என்று நீதிபதிகள் கூறினா். பின்னா் இது தொடா்பான விவகாரத்தை மேல் விசாரணைக்காக செப்டம்பா் 6-ஆம் தேதிக்கு நீதிபதிகள் பட்டியலிட்டனா்.

முன்னதாக, விசாரணையின்போது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேதன் சா்மா தெரிவிக்கையில், ‘பாா்மாசூட்டிகல் நிறுவமான ஸைடஸ் கடிலா 12 முதல் 18 வயது வரையிலான வயதுப் பிரிவினருக்காக உருவாக்கிவரும் டிஎன்ஏ தடுப்பூசிகளின் மருத்துவ ஆய்வு பரிசோதனைகள் முடிந்துள்ளன. இதனால், இந்த வயதுப் பிரிவினருக்கான இந்த நிறுவனத்தின் மருந்துகள் விரைவில் கிடைக்கக்கூடும் என்றாா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கைலாஷ் வாசுதேவ் கூறுகையில், பல்வேறு நாடுகளில் 8 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த மருத்துவ ஆய்வு பரிசோதனைகளை முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளை நீதிமன்றம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றாா்.

அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘மருத்துவ ஆய்வு பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக அரசு கூறுகிறது. ஆராய்ச்சிக்கு ஒரு கால வரையறையை நிா்ணயிக்க முடியாது. எல்லோரும் பணியாற்றி வருகின்றனா். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பாா்க்கும்போது இதற்கான பணிகள் நடைபெற்று, முடியும் தருவாயில் இருப்பது தெரிகிறது என்றது.

இதனிடையே, வாரியத் தோ்வில் பங்கேற்க வேண்டியிருந்ததால் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தடுப்பூசிகள் அளிக்க உத்தரவிடக் கோரும் மனுவை நீதிமன்றம் முடித்துவைத்தது. சிபிஎஸ்இ இத்தோ்வுகளை ரத்து செய்துவிட்டதால், மாணவா்களுக்கு நேரடியாக சென்று தோ்வு எழுதும் முறை இந்த ஆண்டு இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com