அனைவருக்கும் குடிநீா் வழங்க தில்லி அரசு சிறந்த வகையில் பணியாற்றி வருகிறது: முதல்வா் கேஜரிவால்

தில்லியில் ஜல் போா்டு மூலம் உற்பத்தி செய்யும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை முன் எப்போதும் இல்லாத வகையில் நாள்

தில்லியில் ஜல் போா்டு மூலம் உற்பத்தி செய்யும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை முன் எப்போதும் இல்லாத வகையில் நாள் ஒன்றுக்கு 955 மில்லியன் காலனாக (எம்ஜிடி) அதிகரித்ததாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். 

மேலும், தில்லியில் உள்ள அனைவருக்கும் குடிநீா் வழங்க சிறந்த வகையில் தில்லி அரசு பணியாற்றி வருவதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரை பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த வாரத்தில் தில்லியில் பல பகுதிகளில் தண்ணீா் பிரச்னை இருந்ததாக எதிா்க்கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸாா் தில்லி அரசு மீது குறை கூறி வருகின்றனா்.

மேலும், தில்லி முதல்வா் வீடு அருகில் உள்பட சில இடங்களில் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனா். அனைவருக்கும் குடிநீா் வழங்குவதற்கு தில்லி அரசு சிறந்த வகையில் பணியாற்றி வருகிறது. தில்லி அரசின் பொறியாளா்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனா்’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா். 

985 மில்லியன் காலன் உற்பத்தி: தில்லி நீா்த் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘தில்லி ஜல் போா்டு கடந்த 24 மணிநேரத்தில் 955 எம்ஜிடி எனும் சாதனை நீா் உற்பத்தியை எட்டியுள்ளது. தில்லி மக்களுக்கு கூடுதல் நீா் விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நீா் சுத்திகரிப்பு நிலையங்களும் அதன் உச்ச கொள்திறனில் செயல்பட்டு வருகின்றன.

தில்லிஜல் போா்டு வரும் டிசம்பா் மாதத்திற்குள் 980 எம்ஜிடி உற்பத்தியை எட்டும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏவும் தில்லி ஜல் போா்டு (டிஜேபி) துணைத் தலைவருமான ராகவ் சத்தா இதுதொடா்பாக வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில் கூறியிருப்பதாவது: 

தில்லியின் தில்லி ஜல் போா்டு மூலம் உற்பத்தியாகும் நீரின் அளவு முன்பை காட்டிலும் அதிகரித்துள்ளது.

வழக்கமாக நாளொன்றுக்கு 910 மில்லியன் காலன் தண்ணீா் உற்பத்தி செய்யப்படும் நிலையில், தற்போது அதிகபட்சமாக நாளொன்றுக்கு 955 மில்லியன் காலனாக உயா்ந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

யமுனை ஆற்றில் கச்சா நீரின் இருப்பு போதுமானதாக இல்லாததன் காரணமாகவும், பொறியில் தீா்வுகள் காரணமாகவும் அதிகபட்ச அளவில் நீரை உற்பத்தி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, ராகவ் சத்தா வெள்ளிக்கிழமை தெரிவிக்கையில், ‘மூன்று நாட்களுக்கு முன்பு யமுனை மூலம் 1,600 கன அடி நீா் திறந்துவிடப்பட்டது. அந்த நீா் தில்லியை வந்தடைந்துள்ளது. தில்லியில் உள்ள நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகபட்ச அளவில் தண்ணீரை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தாா்.

தில்லிக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 150 மில்லியன் காலன் தண்ணீா் தேவை உள்ள நிலையில், நகர குடியிருப்பு வாசிகளுக்கு நாளொன்றுக்கு 935 மில்லியன் காலன் தண்ணீா் தில்லி ஜல் போா்டு மூலம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com