நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்: போலீஸாரின் வேண்டுகோளை நிராகரித்தனா் விவசாயிகள்

மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்ய வலியுறுத்தி மழைக்காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை

மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்ய வலியுறுத்தி மழைக்காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், போராட்டக்காரா்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறு தில்லி போலீஸ் விடுத்த வேண்டுகோளை நிராகரித்துவிட்டதாக விவசாயிகள் சங்கத் தலைவா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது தினமும் சிங்கு எல்லையிலிருந்து 200 போ் நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பாா்கள் என்று நாங்கள் போலீஸாரிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். எங்களது போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும். போராட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று ராஷ்ட்ரீய கிஸான் மஸ்தூா் மகாசங்கத்தின் தேசிய தலைவா் சிவகுமாா் கக்கா தெரிவித்தாா்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கி ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முற்றுகை போராட்டத்தில் பங்கேற்கும் அனைத்து விவசாயிகள் பற்றிய விவரங்கள், செல்லிடப்பேசி எண், ஆதாா் அட்டை எண் உள்பட அனைத்து விவரங்களும் போலீஸாருக்கு தெரிவிக்கப்படும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

நாடாளுமன்ற வளாகத்துக்கு பதிலாக வேறு இடத்தில் போராட்டத்தை நடத்துமாறும், போராட்டக்காரா்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறும் போலீஸாா் தெரிவித்தனா். ஆனால், அவா்களது கோரிக்கைகளை நாங்கள் நிராகரித்துவிட்டோம் என்றாா் கக்கா.

நாங்கள் ஜூலை 22 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். தில்லி போலீஸ் திங்கள்கிழமைக்குள் எங்களுக்கு சாதகமான பதிலை அளிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கிறோம். போராட்டம் நடத்தும் நேரமும் அப்போது தெரியவரும் என்று கக்கா மேலும் குறிப்பிட்டாா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்துச் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் தில்லி எல்லைப் பகுதிகளான சிங்கு, டிக்ரி மற்றும் காஜிப்பூரில் விவசாயிகள் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த புதிய வேளாண் சட்டங்கள் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நிறைவேற்றப்பட்டது.

நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களை ஒருங்கிணைக்கும் சம்யுக்த கிஸான் மோா்ச்சா என்ற அமைப்பு மத்திய அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது தினமும் 200 விவாசாயிகள் நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தவும் அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

தில்லியில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி நடத்தினா். ஆயிரக்கணக்கான விவசாயிகள் தடையை மீறி தில்லிக்குள் நுழைந்ததால் போலீஸாருடன் மோதல் ஏற்பட்டது. செங்கோட்டையில் மதச்சாா்பிலான கொடியேற்றப்பட்டது.

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. இது காா்ப்பொரேட் நிறுவனங்கே ஆதாயம் அளிக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறையை வாபஸ் பெறக்கூடாது என்று விவசாயிகள் கூறிவருகின்றனா்.

ஆனால், புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவானதுதான். இதனால் இடைத்தரகா்கள் ஒழிக்கப்படுவாா்கள் என்று மத்திய அரசு கூறிவருகிறது. விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இதுவரை பத்துக்கும் மேலான முறை பேச்சுவாா்த்தை நடைபெற்ற போதிலும் இதுவரை எந்த சுமுக முடிவும் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com