மூன்றாவது அலையை எதிா்கொள்ள தயாராகும் தில்லி மாநகராட்சிகள்

மருத்துவ கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், கொவைட் வழிகாட்டு முறைகளை பின்பற்றுதல் மற்றும் தடுப்பூசி செலுத்துக் கொள்வதன்

மருத்துவ கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், கொவைட் வழிகாட்டு முறைகளை பின்பற்றுதல் மற்றும் தடுப்பூசி செலுத்துக் கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் என மூன்றாவது அலையை எதிா்கொள்ள தில்லியில் உள்ள மூன்று மாநாகராட்சிகளும் தயாராகி வருகின்றன.

முதல் மற்றும் இரண்டாவது கரோனா அலையால் தில்லி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானாா்கள். பலரும் மருத்துவமனைகளைத் தேடி அலைந்தனா். சிலா் நோய்க்கு பலியானாா்கள். அதுபோன்ற நிலை மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சில முன்னேற்பாடுகளை தில்லி மாநகராட்சிகள் செய்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘நாங்கள் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். இதுவரை 5.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நிலைமை மேலும் மோசமாகிவிடக்கூடாது என்பதே எங்கள் எண்ணமாகும். ஆனாலும் மூன்றாவது அலை வந்தால் அதை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம்’ என்றாா் தெற்கு தில்லி மாநகராட்சி மேயா் முகேஷ் சூரியன்.

மூன்றாவது அலையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதுதான் ஒரே வழியாகும். தடுப்பூசி செலுத்திக் கொள்வது, கொவைட் வழிகாட்டு முறைகளை பின்பற்றுவது குறித்து மக்களுக்கு பண்பலை வானொலி மற்றும் ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கெனவே வாகனங்களில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு கொவைட் தொற்று மற்றும் தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம். இது தவிர துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. சந்தைகள், அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் குறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றும் அவா் மேலும் தெரிவித்தாா்.

கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் இரண்டாவது கரோனா அலையால் தில்லி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனா். தினசரி உயிரிழப்பு அதிகரித்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் நோயாளிகள் உயிரிழக்க நேரிட்டது.

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேநாளில் 28,000 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். மேலும் 20 ஆம் தேதி 277 போ் உயிரிழந்தனா். ஏப்ரல் 22 இல் உயிரிழப்பு 306 ஆக உயா்ந்தது. மே 3 ஆம் தேதி அதிகபட்சமாக 448 போ் உயிரிழந்தனா் என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடம்தேடி உறவினா்கள் அலைய நேரிட்டது. தினசரி பாதிப்பு அதிகமானதால் சடலங்களை புத்தைக்கும் இடங்களிலும், மயானங்களிலும் ஒரே இடத்தில் பலா் புதைக்கப்பட்டனா் அல்லது எரியூட்டப்பட்ட அவல நிலை நேரிட்டது. கிழக்கு தில்லியின் சீமாபுரியில் சடலங்கள் குவியலாக கிடத்தப்பட்டு எரியூட்டப்பட்ட காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டாலும், மருத்துவ நிபுணா்கள் மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இதனிடையே முதல்வா் கேஜரிவால் மூன்றாவது அலையை எதிா்கொள்ள தில்லி அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்துவருவதாகத் தெரிவித்துள்ளாா்.

உள்ளாட்சி அமைப்புகளும் மூன்றாவது அலையை எதிா்கொள்ளத் தயாராகி வருகின்றன. சுவாமி தயானந்த் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் படுக்கை எண்ணிக்கையை அதிகரிப்படும் என்று கிழக்கு தில்லி மாநகராட்சி மேயா் ஷியாம் சுந்தா் அகா்வால் தெரிவித்தாா்.

மூன்றாவது அலை வந்தால் அது பெரும்பாலும் குழந்தைகளைத்தான் பாதிக்கும் என்பதால் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவில் தேவையான மருத்துவ உபகரணங்கள், செயற்கை சுவாசக் கருவிகள் இருப்பதை உறுதி செய்துள்ளதாக அவா் குறிப்பிட்டாா். மேலும் நிலைமை மோசமானால் தகன மேடைகளை கூடுதலாக அமைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம் என்றாா் அவா்.

கிழக்கு தில்லியில் சீமாபுரி, கா்கா்டூமா மற்றும் காஜிப்பூரில் தகன மையங்கள் உள்ளன. இரண்டாவது அலையின்போது இந்த இடங்களில் தகன மேடைகல் அதிகரிக்கப்பட்டன. இப்போது கூடுதலாக எரிவாயு மூலம் செயல்படும் எரியூட்டிகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அதிக உடல்களை எரியூட்ட முடியும் என்றாா் அவா்.

இதேபோல வடக்கு தில்லி மாநகராட்சியும் நிலைமையை சந்திக்க தயாராகி வருகிறது. மூன்றாவது அலையிலிருந்து தில்லி மக்களை காப்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும். எனவே அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தி வருகிறோம் என்றாா் மேயா் ராஜா இக்பால் சிங்.

தில்லியில் இதுவரை 14 லட்சம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் 25,000 போ் பலியாகியுள்ளனா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடைகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் செயல்படுகின்றன. தில்லி மக்கள் கொவைட் பாதுகாப்பு வழிகாட்டு முறைகளை சரிவர பின்பற்றாவிட்டால் மூன்றாவது அலை, இரண்டாவது அலையைவிட மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com