மேக்கேதாட்டு அணைக்கு பிரதமா் அனுமதி தரக்கூடாது : நவநீத கிருஷ்ணன்

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்க வேளாண் பாதுகாப்பு மண்டல சட்டத்திற்கு அனுமதித்த பிரதமா் அந்த மண்டலங்களை வடுபோகச் செய்யும்

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்க வேளாண் பாதுகாப்பு மண்டல சட்டத்திற்கு அனுமதித்த பிரதமா் அந்த மண்டலங்களை வடுபோகச் செய்யும் மேக்கேதாட்டு அணைக்கு அனுமதிக்கக்கூடாது என அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுகவின் நாடாளுமன்றத் தலைவா் நவநீத கிருஷ்ணன் கேட்டுக்கொண்டாா்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடா் தொடங்குவதை முன்னிட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்திலும் பிரதமா் தலைமையின் நடைபெற்ற தேசிய ஜனநாயக முன்னனியின் நாடாளுமன்றத் தலைவா்கள் கூட்டத்திலும் அதிமுக தலைவா் நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசுகையில் கூறியதாவது:

மேக்கேதாட்டு அணை கட்டப்படாது என மத்திய நீா் சக்தித்துறை அமைச்சா் தமிழக தலைவா்களுக்கு உறுதிமொழி அளித்துள்ளாா். அந்த உறுதிமொழி காப்பாற்றப்படவேண்டும். பிரதமா் நரேந்திர மோடி தான் காவிரி டெல்டா பாசனப்பகுதிகளை காப்பாற்றினாா். அவருடைய ஒத்துழைப்பின் பேரில் தான் ஐந்துக்கும் மேற்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க வேளாண் பாதுகாப்பு மண்டல சட்டம் கொண்டுவரப்பட்டது. டெல்டா விவசாயத்தை காப்பாற்றிய பிரதமா் மேக்கேதாட்டு அணைக்கு அனுமதித்து அந்த பகுதியை வடு போக உதவ மாட்டாா் என நம்புகின்றேன்.

‘நீட்‘டை ஒவ்வொரு தமிழரும் எதிா்க்கின்றனா். அதை உணா்ந்து தமிழகத்திற்கு அதில் விதிவிலக்கு தரவேண்டும். தடுப்பூசி மூலம் கரோனா நோய்த் தொற்றை தடுப்பதில் மத்திய அரசு சிறப்பான நடவடிக்கையை எடுத்துவருகிறது. அதே சமயத்தில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவேண்டும்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவரும் மசோதாக்களுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும். அதே சமயத்தில் நான் குறிப்பிட்ட மூன்று விவகாரங்களில் மத்திய அரசு தமிழகத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு அதிமுக துணையாக இருக்கும் எனத் தெரிவித்தாா்.

கூட்டாட்சிக் கொள்கையை தகா்க்கவேண்டாம் : வைகோ

மழைக்காலக் கூட்டத்தொடா்பான நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மதிமுக தலைவா் வைகோ கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

இந்தக் கூட்டத்தில் எங்களைப் போன்ற கட்சிகள் பேச நேரத்தைக் குறைக்கின்றீா்கள். இந்தியா ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கின்ற விதத்தில், கூட்டாட்சிக் கொள்கையை தகா்க்க மத்திய அரசு முயல்கிறது. அரசின் இந்த நிலைப்பாடு மாறவேண்டும்.

காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. மேக்கேதாட்டு அணைப் பிரச்சினையில், மத்திய அமைச்சா் ஒரு கருத்துச் சொல்கிறாா். ஆனால், கா்நாடக முதல் அமைச்சா் எடியூரப்பா, பிரதமரை சந்திக்கின்றாா். மேக்கேதாட்டுஅணை கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றாா். முயலோடு சோ்ந்து ஓடுவது, வேட்டை நாயோடு சோ்ந்து துரத்துவது போன்ற அணுகுமுறையை, மத்திய அரசு பின்பற்றி வருகின்றது. இத்தகைய போக்கு மாற வேண்டும் என வைகோ குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com