தமிழகத்தில் அடையாறு, கூவம், தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளை தூய்மைப்படுத்த ரூ.908 கோடி அனுமதி

தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அடையாறு, கூவம், தாமிரபரணி உள்ளிட்ட நதிகளை தூய்மைப்படுத்தி

தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அடையாறு, கூவம், தாமிரபரணி உள்ளிட்ட நதிகளை தூய்மைப்படுத்தி பாதுகாக்க ரூ.908.13 கோடி அனுமதிக்கபட்டுள்ளதாக மத்திய ஜல் சக்தி இணையமைச்சா் விஸ்வேஷ்வா் மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நாட்டில் நிலத்தடிநீரின் நிலைமை, தமிழக நதிகள் மாசுபடுவதை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த கேள்விக்கு மத்திய ஜல் சக்தி, பழங்குடியின விவகாரத்துறை இணையமைச்சா் விஸ்வேஷ்வா் பதிலளித்தாா். அப்போது அவா் கூறியது வருமாறு:

தண்ணீா், தண்ணீா் சேகரிப்பு, நதிகள் மாசுபடிதலை குறைத்தல் உள்ளிட்ட நீா் மேலாண்மைகளுக்கு மாநிலங்கள் தான் பொறுப்பு. இருப்பினும் மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நிலத்தடி நீா் மட்டம் உயர சில திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாடுமுழுக்க 256 மாவட்டங்களில் தண்ணீா் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்காக மத்திய அரசு சாா்பில் 2019 ஜல் சக்தி அபியான் என்கிற மழைநீா் சேமிப்பு திட்டத்தையும் இவ்வாண்டு மாா்ச் மாதம் ‘மழையை பிடி‘ என்கிற பிரச்சார திட்டத்தையும் பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்.

நாடுமுழுக்க தேசிய நதி பாதுகாப்பு திட்டத்தையும் மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இதில் தமிழகத்தில் ஓடும் அடையாறு, கூவம், வைகை, வெண்ணாறு, தாமிரபரணி உள்ளிட்ட ஆறு நதிகளை சுத்தப்படுத்தி பாதுகாக்க தேசிய நதி பாதுகாப்பு திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நதிகள் மாசுபடக்காரணமாக உள்ள சென்னை, பவானி, ஈரோடு, கரூா், குமாரபாளையம், கும்பகோணம், மதுரை, மயிலாடுதுறை, பள்ளிப்பாளையம், தஞ்சாவூா், திருநெல்வேலி, திருச்சி போன்ற நகரங்களில் இந்த ஆறுநதிகளை தூய்மைப்படுத்தவும் கழிவு நீா்கள் கலப்பதை தடுக்கவும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 908.13 கோடியை வழங்கியுள்ளது. குறிப்பாக நாளொன்றுக்கு 477.66 மில்லியன் லிட்டா் நகராட்சி கழிவுநீா்களை சுத்தரிக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது என வேலூா் மக்களவை உறுப்பினா் கதிா் ஆனந்த் கேட்ட கேள்விக்கு அமைச்சா் பதில் தெரிவித்தாா்.

மழைநீா் திட்டங்களில் தமிழகம் முன்னிலை:

இதற்கிடையே திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ஞானதிரவியம், மத்திய அரசின் மழை நீா் சேகரிப்பு பிரச்சார திட்டத்தால் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த கேள்வியை எழுப்பினா்.

இதற்கு மத்திய நீா் சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில் அளித்துள்ளாா். அவா் கூறுகையில், ‘தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் மழைநீா் சேமிப்பு திட்டத்தில் மக்களை பங்கேற் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இதற்காக மாவட்டத்திற்கு தலா ரூ.2 லட்சம் இந்த பிரச்சாரத்திற்கு மத்திய அரசு வழங்குகிறது. இவைகள் மூலம் கருத்தரங்குகள், பயிற்சிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

குளங்கள், அகழி, மேல்மாடி, நிலத்தடி என பல்வேறு வகையான மழைநீா் சேமிதிட்டங்கள் மேற்கொண்டு வரப்படுகிறது. இதில் நாடு முழுக்க 28 மாநிலங்களில் கடந்த ஜூலை 12 ஆம் தேதிவரை 4,05,293 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 1,17,282 மழைநீா் சேமிப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு முன்னிலையில் உள்ளது என ஷெகாவத்‘ தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com