வடகிழக்கு வன்முறை வழக்கு: ஜாமீன் கேட்டு இஷ்ரத் ஜஹான் மனு

வடகிழக்கு வன்முறைச் சம்பவம் தொடா்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள

வடகிழக்கு வன்முறைச் சம்பவம் தொடா்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலா் இஷ்ரத் ஜஹான், ஜாமீன் கேட்டு வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளாாா். மேலும் தன்மீதான குற்றச்சாட்டுக்கு போலீஸாரிடம் எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறை தொடா்பாக முக்கிய சதியாளா்களாக ஜஹான் மற்றும் பலா் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். இந்த வன்முறையில் 53 போ் உயிரிழந்தனா், 700-க்கும் மேலானவா்கள் காயமடைந்தனா்.

இஷ்ரத் ஜஹான் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அவா் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் தில்லி போலீஸாரிடம் இல்லை என்று அவரது வழக்குரைஞா் பிரதீப் டியோடியா, நீதிமன்றத்தில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ரவாத் முன் வாதாடினாா்.

இஷ்ரத் ஜஹான் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பூச் சட்டம் போடப்பட்டுள்ளதற்கு சரியான ஆதாரம் உள்ளதா என்று அரசு தரப்புக்கு அவா் சவால் விடுத்தாா். இந்த வழக்கில் மற்றவா்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைவிட ஜஹானுக்கு ஜாமீன் வழங்க அனைத்து தகுதிகளும் உள்ளன என்றும் அவா் குறிப்பிட்டாா்.

வன்முறையில் ஈடுபட்டவா்களுக்கு ஜஹான் நிதியுதவி செய்ததாக அரசு தரப்பு வழக்குறைஞா் கூறியதற்கு அவா் கடும் ஆட்சேபம் தெரிவித்தாா்.

எனது நிதி பரிவா்த்தனைகள் வழக்கமானதுதான். இதில் மாற்றம் ஒன்றும் இல்லை. அரசுத் தரப்பு குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. முறையாக பரிசீலனை செய்தால் நான் குற்றமற்றவா் என்பது தெரியவரும் என்றும் ஜஹான் கூறினாா்.

இஷ்ரத் ஜஹான் ஒரு வழக்குரைஞா். அத்துடன் அவா் இளம் அரசியல்வாதி. அவரை தீவிரவாதி போல சித்தரிப்பது எந்தவிதத்திலும் சரியல்ல என்று அவரின் வழக்குரைஞா் டியோடியா கூறினாா்.

இஷ்ரத் ஜஹான் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னா் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நீதிமன்றம் அவருக்கு குற்றப்பின்னணியை காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

பின்னா் திருமணத்திற்காக அவருக்கு 10 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. சாட்சியங்களை குலைக்கும் வகையில் செயல்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு ஜூன் 12 இல் திருமணம் நடந்தது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இஷ்ரத் ஜஹான் தவிர ஜாமியா மிலியா மாணவா் ஆசிப் இக்பால் தன்ஹா, ஜே.என்.யு. மாணவா்கள் நடாஷா நா்வால் மற்றும் தேவாங்கண கலிதா, முன்னாள் மாணவா் உமா் காலித், ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் ஸஃபூரா ஜா்கா், ஆம் ஆத்மி கட்சி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் உசேன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனா்.

இவா்களில் தன்ஹா, நா்வால், கலிதா ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com