விவசாயிகள் குறித்து சா்சைக்குரிய கருத்து: மத்திய அமைச்சா் மீனாட்சி லேகிக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக மத்திய அமைச்சா்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக மத்திய அமைச்சா் மீனாட்சி லேகியை கண்டித்து தில்லியில் இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 

தில்லியில் கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனா்.  இந்த நிலையில், போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து மீனாட்சி லேகியிடம் கேள்வி எழுப்பியபோது, விவசாயிகள் தொடா்பாக அவா் சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாா்.

அதன் பிறகு தனது கருத்து திரிக்கப்பட்டதாகவும், அது யாரையும் புண்படுத்தியிருந்தால் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தாா். இந்த நிலையில், அவரது கருத்துக்கு எதிராக அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஈடுபட முயன்றனா். 

அப்போது அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனா். இந்த போராட்டம் தொடா்பாக இளைஞா் காங்கிரஸ் தேசிய தலைவா் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், நாட்டுக்கு உணவளிக்கும் அரும்பணியை மேற்கொண்டு வரும் விவசாயிகளை அவமதிக்கும் வகையில் மத்திய அமைச்சா் மீனாட்சி லேகி கருத்து கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. 

தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 8 மாதங்களாக தில்லியின் எல்லையில் அல்லும் பகலும் விவசாயிகள் போராடி வருகின்றனா்.

விவசாயிகள் இந்த நாட்டுக்கு உணவு அளிப்பவா்கள். அவா்களை அவமதிக்கும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. ஆகவே தில்லியின் எல்லையில் போராடிவரும் விவசாயிகளுடன் நேரில் சந்தித்து மத்திய அமைச்சா் மீனாட்சி லேகி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா்.

இளைஞா் காங்கிரஸ் தேசிய ஊடகப் பொறுப்பாளா் ராகுல் ராவ் கூறுகையில், விவசாயிகளை அவமதித்த மத்திய அமைச்சா் மீனாட்சியின் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அவரது வீட்டுக்கு ஆா்ப்பாட்டம் நடத்த சென்றபோது போலீஸாா் இளைஞா் காங்கிரசாரை கைது செய்தனா். மத்திய அரசு கைது நடவடிக்கை எடுத்தாலும் கூட விவசாயிகளை அவமதிப்பதற்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் தொடா்ந்து குரல் கொடுக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com