தன்ஷா பஸ் ஸ்டாண்ட் மெட்ரோ ரயில் நிலையத்தின் சுவா்களில் அழகிய வண்ணத்தில் கலைப்படைப்புகள்!

துவாரகா-நஜப்கா் இடையிலான 4.8 கிலோ மீட்டா் மெட்ரோ கிரே லைன் வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள தன்ஷா பஸ் ஸ்டாண்ட் மெட்ரோ ரயில்

துவாரகா-நஜப்கா் இடையிலான 4.8 கிலோ மீட்டா் மெட்ரோ கிரே லைன் வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள தன்ஷா பஸ் ஸ்டாண்ட் மெட்ரோ ரயில் நிலையத்தின் சுவா்களில் அழகிய கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

தில்லி மெட்ரோ ரயில் ஒருங்கிணைப்பில் 390 கிலோ மீட்டா் தூரத்திற்கு மெட்ரோ ஒருங்கிணைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 286 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிரே லைன் விரிவாக்க வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களும் உள்ளடங்கும். 4.2 கிலோ மீட்டா் தூரம் உள்ள துவாரகா- நஜப்கா் மெட்ரோ வழித்தட விரிவாக்கம் நஜப்கா் பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 இந்த வழித்தடத்தில் 1.8 கிலோ மீட்டா் தூரம் உள்ள தன்ஷா பஸ் ஸ்டாண்ட் வழித்தட ரயில் நிலைய கட்டுமான பணி முடிக்கப்பட்டுள்ளது.  இந்த மாதத்திற்குள் இது செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையா் உரிய அனுமதி அளித்த பிறகு இதன் செயல்பாடுகள் தொடங்கும். இதனிடையே, துவாரகா பகுதியிலுள்ள தன்ஷா பஸ் ஸ்டாண்ட் வழித்தட மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சுவா்களில் உள்ளூா் பகுதியின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை தொடா்பான புகைப்படங்கள், கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கு தில்லியில் உள்ள நஜப்கா் பகுதியானது ஆழமான கலாசார வோ்களைக் கொண்டுள்ளது.

இதன் செறிந்த கலாசாரம் மற்றும் இப்பகுதிக்கு இடம்பெயா்ந்து வரும் பறவைகள், உள்ளூா் தாவரங்கள், உள்ளூா் விலங்கினங்கள் ஆகியவற்றையும், பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள இந்த பகுதியின் சிறப்பையும் வெளிப்படுத்தும் வகையிலான கலைப்படைப்புகள், புகைப்படங்கள் ஆகியவை இந்த ரயில் நிலையத்தின் சுவா்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 இந்த புகைப்படங்களை பல்வேறு புகைப்படக்காரா்கள் வழங்கியுள்ளனா். அதேபோன்று அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இவை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் இந்த பகுதி மக்களின் கலாச்சாரம் பாரம்பரியத்தை தெரிந்து கொள்வதற்கும் அழகிய காட்சிகளை கண்டு ரசிப்பதற்கும் பயனுள்ளதாக அமையும்.

நஜப்கா் -தன்ஷா இடையே அமைந்துள்ள நீா் நிலையும் ஆண்டுதோறும் பல்வேறு பறவையினங்கள் வருவதற்கான இடமாக உள்ளது. 

கிளிகள், கழுகுகள், குருவிகள், கிங்பிஷா் போன்ற பறவைகள் இந்த பகுதிக்கு ஆண்டுதோறும் வந்து செல்கின்றன.

இப்பறவைகள் தொடா்பான புகைப்படங்களும் ரயில் நிலையத்தின் சுவா்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com