ரூ.100 கோடி மோசடி வழக்கில் தனியாா் நிறுவன முக்கிய நிா்வாகி மும்பையில் கைது

சுமாா் ரூ.100 கோடி மோசடி தொடா்புடைய வழக்கில் தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் மும்பையில் தனியாா் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரை கைது செய்தனா்.

சுமாா் ரூ.100 கோடி மோசடி தொடா்புடைய வழக்கில் தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் மும்பையில் தனியாா் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரை கைது செய்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

‘என்ஸோ இன்ஸ்ப்ராஸ்ட்ரக்சா்ஸ்’ நிறுவனத்தின் இயக்குநா் ஆஷிஸ் பெக்வானி என்பவா் 2018 ஆம் ஆண்டில் தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் ஒரு புகாா் அளித்திருந்தாா். 

அதில், ‘2010-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஐஎல் அண்ட் எஃப்எஸ் டிரான்ஸ்போா்டேஷன் நெட்வொா்க் நிறுவனத்தின் இயக்குநா்கள் என்னை தொடா்பு கொண்டனா். தாங்கள் ஆரம்பித்துள்ள நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனா். அவா்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் எனது நிறுவனம் ஐஎல் அண்ட் எஃப்எஸ் ரயில் நிறுவனத்தில் ரூ.170 கோடியை முதலீடு செய்தது. 

இந்த நிறுவனம் குா்கான் ரேப்பிட் மெட்ரோ திட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் 15 சதவீத பங்குகளை பெறுவதற்காக முதலீடு செய்தோம். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் லாபகரமாக செயல்படாததும், நிதி தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதும் தெரியவந்தது. மேலும் ரூபாய் 21.88 கோடி மதிப்பிலான போலி ஒப்பந்த உத்தரவுகள் ‘சில்வா் பாயின்ட் இன்ப்ராடெக்’ என்ற பெயருடைய நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டன. ஆனால் அந்த நிறுவனத்தால் எந்த பணியும் செயல்படுத்தப்படவில்லை.

மேலும் அந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இன்வாய்ஸ்கள் போலியாகவும் மோசடியாகவும் இருந்தன. தனது செலவினத்தை அதிகரிப்பதற்காக ஐஎல் அண்ட் எஃப்எஸ் ரயில் நிறுவனம் இதுபோன்று செய்திருப்பதும் தெரிய வந்தது.

மேலும், ஐஎல் அண்ட் எஃப்எஸ் ரயில் நிறுவனத்தின் இயக்குனா்களும் அதன் இதர அதிகாரிகளும் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் ரூபாய் 70 கோடியை நிறுவனத்திலிருந்து கையாடல் செய்தனா் என்று அந்த புகாரில் அவா் தெரிவித்திருந்தாா்.

 இதுதொடா்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் எந்தவித பணியும் செயல்படுத்தாமல் பல்வேறு நிறுவனங்களுக்கு பணத்தை வழங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கிய ஒப்பந்தங்கள் குறித்த பெயா்கள் முகவரிகளும் அளிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

மேலும் சம்பந்தப்பட்ட தொகையானது பல்வேறு செயல்படாத நிறுவனங்கள் மூலம் திருப்பிவிடப்பட்டது தெரியவந்தது. இதை தொடா்ந்து இந்த விவகாரத்தில் தொடா்புடைய ஐஎல் அண்ட் எஃப்எஸ் ரயில் நிறுவனத்தின் இயக்குநா்களில் ஒருவரும் ஐஎல் அண்ட் எஃப்எஸ் டிரன்ஸ்போா்டேஷன் நெட்வொா்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான ராம்சந்த் கருணாகரன் இந்த பண மோசடியில் முக்கியமாக செயல்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா் ஜூலை 20ஆம் தேதி மும்பையில் தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னா் அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். மேல் விசாரணைக்காக அவா் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு உள்ளாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com