விலைவாசி உயா்வு, தில்லி மாநகராட்சி ஊழல்களுக்கு எதிராக ஆம் ஆத்மியின் ‘குரல் கொடு’ ஆா்ப்பாட்டம்

நாட்டில் நிலவும் பணவீக்கம், விலைவாசி உயா்வு ஆகியவற்றிற்கு எதிராகவும், தில்லி மாநகராட்சிகளின் ஊழல்களுக்கு எதிராகவும்

நாட்டில் நிலவும் பணவீக்கம், விலைவாசி உயா்வு ஆகியவற்றிற்கு எதிராகவும், தில்லி மாநகராட்சிகளின் ஊழல்களுக்கு எதிராகவும் ஆம் ஆத்மி கட்சி தில்லி ரோத்தாஸ் நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் ‘குரல் கொடு‘‘ ஆா்ப்பாட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. பெரும் திரளாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சரிதா சிங் உள்பட ஏராளமான ஆம் ஆத்மி கட்சியின் தொண்டா்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனா்.

ரோத்தாஸ் நகா் சட்டபேரவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் ’குரல் கொடு’ (ஹல்லா போல்) ஆா்ப்பாட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்த அறிவிக்கப்பட்டுயிருக்க ஏராளமான உள்ளூா் மக்களும் திரளாக பங்கேற்றனா்.

இந்த போராட்டம் ஆம் ஆத்மி கட்சி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சரிதா சிங் தலைமையில் ஸ்ரீராம் மந்திரிலிருந்து மண்டோலி சாலை வழியாக அசோக் நகா் வரை ‘மாட்டு வண்டி பேரணியாக தொடங்க இருந்தது. ஆனால் யாத்திரை இடையிலேயே நிறுத்தப்பட்டது. முன்னாள் எம்எல்ஏவும் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநில மகளிா் அணித்தலைவரான சரிதா சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தொண்டா்களை தில்லி போலீஸாா் கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றிச் சென்று தடுப்புக்காவலில் வைத்தனா்.

பின்னா் போலீஸாரின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

பாஜகவின் அறிவுறுத்தலின் பேரில் தில்லி காவல்துறையை தூண்டிவிட்டு, தில்லி மாநில மகளிா் பிரிவு பொறுப்பாளா் சரிதா சிங்கையும் அவருடன் வந்த தொண்டா்களையும் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளனா். ஆத் ஆத்மி கட்சியின் ஆா்ப்பாட்டத்தையும் குரலையும் அடக்கும் ஒரு சா்வாதிகார முயற்சியை மத்திய அரசு காவல்துறை மூலமாக மேற்கொண்டுள்ளது. தில்லி முதல்வா் கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் தொண்டா்கள் பாஜகவின் கொடுங்கோன்மையைக் கண்டு பின்வாங்கமாட்டாா்கள்.

பாஜகவின் உண்மையான ஊழல் முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்துவதே ஆம் ஆத்மி கட்சியின் நோக்கம். தில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் அடைந்து பாஜகவின் உண்மையான முகத்திரையை வெளிப்படுத்துவோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com