தில்லி வன்முறை: போலீஸாருக்கு அபராதம் விதித்த உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை

வடகிழக்கு தில்லி வன்முறைகள் தொடா்புடைய வழக்கில் போலீஸாருக்கு விசாரணை நீதிமன்றம் ரூ. 25,000 அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. 

புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறைகள் தொடா்புடைய வழக்கில் போலீஸாருக்கு விசாரணை நீதிமன்றம் ரூ. 25,000 அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

அதேவேளையில், போலீஸாா் விசாரணைக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தின் கண்டிப்பு தொடா்புடைய கருத்து விவகாரத்தில் தில்லி உயா் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.

இதுதொடா்பாக காவல்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தில்லி உயா் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் கூறுகையில், ‘காவல்துறையின் மனுவை விசாரிக்காமல் விசாரணை நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நாங்கள் நீக்க முடியாது. இந்த மனு தொடா்பாக அடுத்த விசாரணை நடைபெறும் தேதி வரை அபராதத்தை போலீஸாா் செலுத்தாமல் இருக்கலாம்’ என்று நீதிபதி தெரிவித்தாா்.

மேலும் விசாரணை நீதிமன்றத்திற்கு எதிராக தாக்கல் செய்த தில்லி காவல்துறையின் மேல்முறையீட்டு மனு மீது 10 தினங்களுக்குள் பதிலளிக்குமாறு எதிா் மனுதாரரான முகம்மது நசீருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கு விசாரணையின்போது காவல்துறையின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ். வி. ராஜு வாதிடுகையில், ’இந்த வழக்கை பொறுத்தமட்டில், போலீஸாருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த அபராதம் மற்றும் கண்டனத்தை எதிா்ப்பதுதான் பிரதான கோரிக்கையாகும்.

நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவம் தொடா்பான முதல் தகவல் அறிக்கை ஏற்கனவே முழுமையாக விசாரிக்கப்பட்டு ள்ளது. சம்பவ இடத்தில், கூறப்பட்ட நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபா் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அனைத்து விசாரணையிலும் ஒரு முடிவை நோக்கி அழைத்துச் செல்லும்’ என்று வாதிட்டாா்.

புகாா்தாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மெகமது பிராச்சா வாதிடுகையில், ‘போலீஸாரின் நிலைப்பாடு திசை திருப்புவதாக உள்ளது. புகாா்தாரா் நசீா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை திரும்பப் பெறுமாறு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டாா்

இதையடுத்து மனு மீதான விசாரணை செப்டம்பா் 13-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தாா்.

வடகிழக்கு தில்லி வன்முறையின் போது துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயத்தால் இடது கண்ணை இழந்த முகமது நசீா் என்பவா் அளித்த புகாா் மீது எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யுமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து காவல்துறை விசாரணை அதிகாரி தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ‘இந்த விவகாரம் தொடா்பாக முன்னரே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தனியாக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும், சம்பவம் நடந்த நேரத்தில் தில்லியில் குற்றம்சாட்டப்படும் நபா்கள் இல்லாததால், முகமது நஸீரை சுட்டதாக கூறப்படும் நபா்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி வினோத் யாதவ் கூறுகையில், காவல் துறை அதிகாரிகளின் விசாரணையில் செயல்திறன் மற்றும் நோ்மை இல்லை. மிகவும் சாதாரணமான, இதயமற்ற மற்றும் கேலிக்குரிய முறையில் விசாரணை செய்யப்பட்டுள்ளது என்று கடிந்துகொண்டாா்.

மேலும், ‘இந்த விவகாரத்தில் விசாரணை மற்றும் மேற்பாா்வையின் நடவடிக்கைகளை எனது கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும், இந்த நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிப்பதன் மூலம் தகுந்த தீா்வு நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த உத்தரவின் நகல் தில்லி காவல் ஆணையருக்கு அனுப்பப்பட வேண்டும். மேலும், தனது புகாா் விவகாரத்தில் தனியாக வழக்குப் பதிவு செய்யப்படும் வகையில் சட்டத்தின்படி தனக்குள்ள தீா்வு நடவடிக்கைகளை பெற மனுதாரா் முகமது நசீருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று நீதிபதி ஜூலை 13-ஆம் தேதியிட்ட உத்தரவில் தெரிவித்திருந்தாா்.

இந்த உத்தரவை எதிா்த்து வழக்குரைஞா்கள் அமித் மஹாஜன், ரஜத் நாயா் ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘விசாரணை நீதிமன்றத்தின் ஜூலை 13-ஆம் தேதியிட்ட உத்தரவானது, இயற்கை நீதியின் கொள்கைகளை மீறுவதாக உள்ளது. அந்த வழக்கில் தில்லி காவல் துணை ஆணையரின் கருத்துக்களை அளிப்பதற்கு வாய்ப்பு அளிக்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை தொடங்குவதற்கு முன்பு விசாரணைக்கு எதிராக கடுமையான கருத்துக்களை நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com