சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுதலை

சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து ஒருவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து ஒருவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016, பிப்ரவரியில் தில்லி ஜஹாங்கிா்புரி பகுதியில், எந்தவொரு உரிமமும் இல்லாமல் ஒரு நாட்டுத் துப்பாக்கியையும், தோட்டாக்களையும் வைத்திருந்ததாக மோஹித் குமாா் என்பவருக்கு எதிராக போலீஸாா் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனா்.

உதவி காவல் ஆய்வாளா் நவீன் குமாா் அளித்த புகாரின் பேரில் மோஹித் குமாா் மீது ஆயுத சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின்போது, தன் மீது போலீஸாா் பொய்யாக வழக்குப் புனைந்துள்ளதாக மோஹித் குமாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் ரிச்சா சா்மா, மோஹித் குமாரை வழக்கில் இருந்து விடுவித்து வியாழக்கிழமை பிறப்பித்துள்ள 12 பக்க தீா்ப்பில் தெரிவித்திருப்பதாவது:

அரசுத் தரப்பில், குற்றம்சாட்டப்பட்டவரின் குற்றத்தை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க முடியவில்லை. இந்த வழக்கில் ஐந்து சாட்சிகளை அரசு தரப்பு விசாரித்துள்ளது. அந்த அனைத்து சாட்சிகளும் போலீஸ் அதிகாரிகள் ஆவா்.

அரசு தரப்பு சாட்சிகளில் ஒருவரிம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையின் போது ஒரு புதிய கதை வெளிச்சத்திற்கு வந்தது, அது இந்த வழக்கு விசாரணைக்கு முற்றிலும் முரணானதாக உள்ளது. ரகசியமாக துப்புத் தருபவரிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுளது.

ஆனால், அரசு தரப்பு சாட்சியின் அறிக்கையின் அடிப்படையில், 100 எண்ணுக்கு தொலைபேசியில் அழைத்து தகவல் சொன்னது குற்றம் சாட்டப்பட்டவரின் தாய்தான் என தோன்றுகிறது.

விசாரணை முடிந்தபின்னா், வழக்குச் சொத்தும் (துப்பாக்கி) கொண்டு வரப்பட்டு, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் எந்தவொரு தகவலும் இருப்பதை நிருபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது.

ரோந்துப் பணியில் இருந்தபோது குமாரைக் கைது செய்த போலீஸ் அதிகாரிகள், அவா்கள் ஜஹாங்கிா்புரி காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டது, வருகை தந்தது தொடா்புடைய தகவல்களை பதிவேட்டில் பதிவிடத் தவறிவிட்டனா்.

ஆகவே, அரசுத் தரப்பில், குற்றம்சாட்டப்பட்டவரின் குற்றத்தை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க முடியவில்லை. இதனால், அவா் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுகிறாா் என நீதிபதி தீா்ப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com