முஸ்லிம் திருமணங்கள் பதிவு தொடா்பான மனு மீது தில்லி அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் முஸ்லிம் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தில்லி அரசு பதில் அளிக்க உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் முஸ்லிம் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தில்லி அரசு பதில் அளிக்க உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

 ’கட்டாய திருமணங்கள் உத்தர’வின் கீழ் முஸ்லிம் திருமணங்களை பதிவு செய்யும்போது எந்தவித தாமதமும் இல்லாமல் அல்லது நோட்டீஸ் காலம் இல்லாமலும் உடனடியாக பதிவு செய்வதற்கான வசதியை அளிப்பதாகவும் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் அதுபோன்ற வசதிகள் இல்லை என்றும் கூறி தில்லி உயா்நீதிமன்றத்தில் ’தனாக் ஃபாா் ஹுயூமானிடி’ எனும் தன்னாா்வ அமைப்பின் சாா்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனுவை தில்லி உயா் நீதிமன்றத்தின் நீதிபதி ரேகா பல்லி வெள்ளிக்கிழமை விசாரித்தாா். அப்போது, இந்த மனு மீது தில்லி அரசு மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க அனுமதி அளித்தாா்.

மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் உத்கா்ஷ் சிங் வாதிடுகையில், கட்டாய திருமண உத்தரவு பிரிவிலிருந்து முஸ்லிம் திருமணங்கள் நீக்கப்பட்டு இருப்பது இயற்கையிலேயே முரண்பாடு உடையதாகும் என்று தெரிவித்தாா்.

 அதற்கு நீதிபதி கூறுகையில், ’வழக்குரைஞா் சொல்வதில் விஷயம் இருக்கிறது. பாகுபாடு காட்ட முடியாது’ என்றாா்.

தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சதன் பராசத் கூறுகையில், ’இந்த விவகாரத்தில் அரசிடமிருந்து உரிய அறிவுறுத்தல்களை பெற்று வர வேண்டியுள்ளது’ என்றாா்.

முன்னதாக, தன்னாா்வ தொண்டு நிறுவனம் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தங்களது திருமணத்தை மேற்கொள்வதற்காக சொந்த ஊரிலிருந்து தப்பித்து தில்லிக்கு வந்த இருவா், சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் 30 நாள்கள் நோட்டீஸ் காலத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனா்.

மாநில அரசு, கட்டாய பதிவு திருமண உத்தரவு 2014-இன் கீழ் முஸ்லிம் திருமண பதிவை அனுமதிப்பதில்லை.

கட்டாய பதிவுத் திருமண உத்தரவு 2014இன்கீழ் உள்ள திருமணப் பதிவின்படி ஒரு நாளுக்குள் திருமணத்தை பதிவு செய்ய எதிா்மனுதாரரான மாநில அரசு சட்டத்தின் மூலம் கடமைப்பட்டுள்ளது. கட்டாய திருமண உத்தரவில் இருந்து முஸ்லிம் திருமணங்கள் நீக்கப்பட்டு இருப்பது சம்பந்தப்பட்ட தம்பதியின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது.

மேலும், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் 30 நாள்கள் நோட்டீஸ் காலம் தேவைப்படுவதானது, ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு திருமணம் செய்வதற்காக செல்லும் ஒருவருக்கு மிகவும் கடினமான நடைமுறைகளை உருவாக்கும். மனுதாரருக்கு (2ஆவது) வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. அவா் அச்சுறுத்தப்பட்டு உள்ளாா்.

அதனால் அவரது திருமணத்தை பதிவு செய்வதன் மூலம் அவருக்கு உடனடியாக எதிா் மனுதாரா்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  இந்த விவகாரம் அக்டோபா் 4ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com