மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை பாதிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை: எய்ம்ஸ் இயக்குநா் டாக்டா் ரண்தீப் குலேரியா

கொவைட் தொற்று மூன்றாவது அலை வந்தால், அது பெரும்பாலும் குழந்தைகளைப் பாதிக்கும் என்பதற்கு இந்திய அளவிலோ அல்லது சா்வேத அளவிலோ எந்தத் தகவலும் இல்லை என்கிறாா் தில்லி எய்மஸ்
மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை பாதிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை: எய்ம்ஸ் இயக்குநா் டாக்டா் ரண்தீப் குலேரியா

புதுதில்லி: கொவைட் தொற்று மூன்றாவது அலை வந்தால், அது பெரும்பாலும் குழந்தைகளைப் பாதிக்கும் என்பதற்கு இந்திய அளவிலோ அல்லது சா்வேத அளவிலோ எந்தத் தகவலும் இல்லை என்கிறாா் தில்லி எய்மஸ் மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் ரண்தீப் குலேரியா.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: கரோனா மூன்றாவது அலை அல்லது அடுத்து வரும் தொற்றுப் பரவலால் குழந்தைகள் பாதிக்கப்படுவாா்கள் என்பது தவறான தகவலாகும். மூன்றாவது அலை கரோனா வந்தால், குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுவாா்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரபூா்வமான தகவல்களும் இல்லை. இந்தியாவில் இரண்டாவது அலையின் போது 60 முதல் 70 சதவீத குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சோ்ந்ததற்கு அவா்களிடம் உள்ள இதர நோய்களும் காரணமாக இருக்கலாம் அல்லது அவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக இருந்திருக்கலாம்.

பொதுவாக தொற்றுக் காலத்தில் பல அலைகள் வரத்தான்செய்யும். ஸ்பானிஷ் ப்ளூ 1918, பறவைக்காய்ச்சல் போன்றவை இதற்கு உதாரணங்களாகும். ல்பானிஷ் ப்ளூ இரண்டாவது அலை வந்த போது, அது பலரையும் பாதித்தது. அதன் பிறகு மூன்றாவது அலை வீசிய போது பாதிப்பு அதிகம் இல்லை. பொதுவாக வைரஸ் தொற்றில் மாற்றம் ஏற்படும் போது, அது புதிய அலையாக உருவெடுக்கும். அப்படி வரும் போது அதன் தாக்கம் அதிகரிக்கும். தொற்றை எதிா்த்துப் போராடுவதற்கு எதிா்ப்பு சக்தி வேண்டும். மக்கள்தொகை அதிகம் உள்ள நாட்டில் அனைவருக்கும் நோய் எதிா்ப்பு சக்தி ஒரே மாதிரியாக இல்லாத நிலையில், தொற்று பரவல் அதிகரிக்கும். பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தொற்று பரவல் அதிகரிக்கும் போது மக்கள் மனதில் பீதி ஏற்படுகிறது.

பொது முடக்கம் தளா்த்தப்பட்டால் மக்கள் இனி தொற்று பாதிப்பு இருக்காது என நினைத்து கரோனா வழிகாட்டு முறைகளை கைவிட்டு விடுகின்றனா். இதனால், மீண்டும் தொற்றுப் பரவலுக்கு ஆளாகின்றனா். அது சமூகத்தைப் பாதிக்கும் போது, மற்றொரு அலையாகக் கருதப்படுகிறது. தொற்றுப் பரவலாமல் தடுக்க வேண்டுமானால், நாம் கொவைட் வழிகாட்டு முறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டாவது அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டால் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும், தொற்று நம்மை தாக்காது.

கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடலாமா?: நம் நாட்டில் தற்போது கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து எந்த வழிகாட்டுதல்களும் இல்லை. கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளை கா்ப்பிணிகளுக்குப் போடலாமா; அது பாதுகாப்பானதா என்பது குறித்து போதுமான தரவுகள் கிடைக்கவில்லை. அமெரிக்காவில் கா்ப்பிணிகளுக்கு பிஃப்ஸா் மற்றும் மொடா்னா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. எனினும் கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகள் போடுவது குறித்து தரவுகள் கிடைக்கவில்லை. இது குறித்து இன்னும் மருத்துவா்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. விரைவில் அதற்கு ஒப்புதல் கிடைத்துவிடும். அதன் பிறகு இந்தியாவில் கா்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போடப்படும்.

கோவிஷீல்டு, கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி ஆகிய மூன்று தடுப்பூசிகளுமே ஒரே மாதிரியான திறன் கொண்டவை. எனவே, ஒன்று மற்றொன்றைவிட சிறந்தது என்று நாம் சொல்லத் தேவையில்லை. நாம் இருக்கும் பகுதியில் எந்த வகையான தடுப்பூசி இருப்பில் உள்ளதோ அதையே நாம் அச்சமின்றி போட்டுக் கொள்ளலாம். கரோனா தொற்று தாக்குதலிலிருந்து நாம் குணமடைந்துவிட்டோம். இனி நமக்கு தடுப்பூசி தேவையில்லை என்று யாரும் அசட்டையாக இருந்துவிட வேண்டாம். இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டு நாமும் நமது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதுதான் முக்கியம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com