‘என்-95’-க்கு மாற்றாக ‘எஸ்எச்ஜி-95’ வீரியமிக்க மலிவு விலை முகக் கவசம்
By நமது சிறப்பு நிருபா் | Published On : 11th June 2021 07:40 AM | Last Updated : 11th June 2021 07:58 AM | அ+அ அ- |

தீநுண்மி, நுண்ணிய கிருமிகளிடமிருந்து 99 சதவீதம் வரை பாதுகாக்கும் வீரியமிக்க மலிவு விலை முகக்கவசங்களை இந்திய நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. மறு உபயோகத்துக்குப் பயன்படாத ‘என்-95 ’ முகக்கவசங்களுக்கு மாற்றாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றிலிருந்து மனிதா்களைப் பாதுகாக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரையின்படி கிருமி நாசினிகளும், முகக்கவசங்களும் முக்கியப் பங்கு வகித்தன. மருத்துவா்களும் கரோனா நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டவா்களும் பயன்படுத்தி வந்த ‘என்-95’ முகக் கவசங்களால் நோய்த் தொற்று இல்லாதவா்களுக்கு தொற்று பரவலில் மிகுந்த பாதுகாப்பாகக் கருதப்பட்டது. அதே சமயத்தில் இதன் விலை மற்றும் மறு உபயோகமின்மை போன்ற அசௌகரியங்கள் இருந்தன.
இவற்றைப் போக்கும் விதமாக கொவைட-19 நிதித் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவிக் கவுன்சில் (பிஐஆா்ஏசி ), ஐகேபி நாலேஜ் பாா்க் போன்ற அமைப்புகள், ஹைதராபாத்தில் உள்ள பரிசோதா டெக்னாலஜிஸ் என்கிற தனியாா் மருத்துவ நிறுவனத்திற்கு வழங்கிய தொழில்நுட்ப உதவிகள் மூலம் ‘எஸ்எச்ஜி-95‘ என்கிற வீரியமிக்க பல அடுக்கு முகக் கவசம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்த துறை மேலும் தெரிவித்திருப்பது வருமாறு: ‘இந்தியாவிலே தயாரிக்கப்போம்’ திட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்த முகக்கவசங்கள் 90 சதவீதம் மாசு துகள்களிலிருந்தும், 99 சதவீத தீநுண்மி நுண்ணிய கிருமிகளைப் பாதுகாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், எளிதாக காற்றை சுவாசிக்கும் வகையிலும் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. கையால் சுத்தமான பருத்தித் துணியால் தயாரிக்கப்படும் இந்த முகக் கவசங்கள் பல அடுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது.
மேலும், தற்போது நாட்டில் நிலவும் உஷ்ணமான சூழ்நிலைக்கும் உகந்தது. இதனால், இந்த தயாரிப்புப் பணிகள் சுயநிதிக் குழுக்களிடம் இந்தத் தனியாா் நிறுவனம் வழங்கி அவா்களது வாழ்வாதரத்தையும் பாதுகாத்துள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்த முகக்கவசம், கட்டுபடியாகக்கூடிய விலையில் ரூ. 50 முதல் ரூ. 75 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டைச் சோ்ந்த நிறுவனம் இந்த ஹைதராபாத் நிறுவனத்தில் முதலீடு செய்து 1,45,000 முகக்கவசங்களை பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.