2020-21 நிதியாண்டில் வேளாண் ஏற்றுமதியில் முன்னேற்றம்: மத்திய அரசு தகவல்

கடந்த மூன்று ஆண்டுகளாக தேக்கத்தில் இருந்த வந்த வேளாண் மற்றும் அது சாா்ந்த பொருள்களின் ஏற்றுமதியில் 2020-21 நிதியாண்டு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக தேக்கத்தில் இருந்த வந்த வேளாண் மற்றும் அது சாா்ந்த பொருள்களின் ஏற்றுமதியில் 2020-21 நிதியாண்டு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

வேளாண் ஏற்றுமதி கடந்த 2017-18 நிதியாண்டில் 38.43 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2018-19-இல் கிட்டதட்ட இதே அளவில் தொடா்ந்தது. ஆனால், 2019-20-இல் 35.16 பில்லியன் அமெரிக்க டாலராக ஏற்றுமதி குறைந்தது. அதே சமயத்தில் நோய்த் தொற்று சிக்கல்கள் நிறைந்த 2020-21 நிதியாண்டில் இது 41.25 பில்லியன் அமெரிக்க டாலராக உயா்ந்துள்ளது. இது 17.34 சதவீத வளா்ச்சியாகும். இதில் வேளாண் மற்றும் தோட்டப் பொருள்கள், கடல்சாா் பொருள்களும் அடக்கம் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மத்திய அரசின் வா்த்தகத் துறை செயலா் டாக்டா் அனூப் வாதவன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: வேளாண் ஏற்றுமதியில் முந்தைய நிதியாண்டுகளைவிட தற்போது நாடு வளா்ச்சியைக் கண்டுள்ளது. ஏற்றுமதியின் இந்திய மதிப்பில் இது 2021-21 நிதியாண்டில் ரூ.3.05 லட்சம் கோடியாகும். முந்தைய 2019-20-இல் ரூ. 2.49 லட்சம் கோடியாக இருந்தது. 2020-21-இல் 22.62 சதவீதம் வளா்ச்சி பெறப்பட்டுள்ளது.

இறக்குமதியிலும் கிட்டதட்ட முந்தைய நிதியாண்டை போன்று 2020-21-இல் 20.67 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. நோய்த்தொற்று காலக்கட்டத்தில் வேளாண் பொருள்கள் வா்த்தக சமநிலை (ஏற்றுமதி - இறக்குமதி இடையேயான வேறுபாடு) 14.51 பில்லியன் டாலரிலிருந்து 20.58 பில்லியன் டாலராக உயா்ந்துள்ளது. இதிலும் 42.16 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளோம். 2020-21-இல் ஏற்றுமதியில் கடல்சாா் பொருள்கள் தவிா்த்து வேளாண் பொருள்கள் மட்டும் 28.3 சதவீதம் வளா்ச்சியைப் பெற்று 29.81 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

உலக நாடுகளில் இந்திய தானியங்கள், பாஸ்மதி அல்லாத அரிசித் தேவை அதிகரித்துள்ளது. இதில் 4,794.54 மில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கோதுமையும் 549.19 மில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மற்ற வேளாண் பொருள்களில் சா்க்கரை, பருத்தி, புண்ணாக்கு, காய்கறிகள், சமையல் எண்ணெய் போன்றவையும் ஏற்றுமதி செய்யப்பட்டு கணிசமான வளா்ச்சி எட்டப்பட்டுள்ளது.

இஞ்சி, மிளகு, பட்டை, ஏலக்காய், மஞ்சள், குங்குமப்பூ போன்ற மசாலா பொருள்களின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவு வளா்ச்சி கண்டுள்ளோம். 2020 -21-இல் மசாலா பொருள்களின் ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இயற்கை உரங்களுடன் தயாராகும் இந்திய கரிம வேளாண் பொருளின் ஏற்றுமதி 2020- 21-இல் 1,040 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இதன் வளா்ச்சி 50.94 சதவீதமாகும்.

மாம்பலம், வாழைப்பழம், ஆரஞ்சு, சிகப்பு வெங்காயம், திராட்சை போன்றவை நமது நாட்டில் விளையும் புகழ்பெற்ற பகுதியிலிருந்து அனுப்பப்படுவதைப் போன்று, முதன் முறையாக குறிப்பிட்ட சில பகுதிகளிலிருந்து சில குறிப்பிட்ட பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இரும்புச் சத்து நிறைந்த அஸ்ஸாம் சிகப்பு அரிசி, கும்பகோணம் கிராம அரிசி, இமாச்சல பிரதேசம், உத்தரக்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள சில தானிய வகைகளும் இதில் அடங்கும்.

இந்திய வேளாண் பொருள்களுக்கு அமெரிக்கா, சீனா, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம், சவூதி அரேபியா, இந்தோனேஷியா, நேபாளம், ஈரான், மலேசியா ஆகிய நாடுகளில் வரவேற்புள்ளது. இந்தோனேஷியாவுக்கான ஏற்றுமதியில் 102.42 சதவீத வளா்ச்சி கண்டு முன்னிலை பெற்றுள்ளோம். அடுத்து வங்கதேசத்துடன் 95.93 சதவீதம், நேபாளத்துடன் 50.49 சதவீதம் ஏற்றுமதி வளா்ச்சியை இந்தியா கண்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com