முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தில்லியில் வாகனங்களுக்கு புதிய வேகக் கட்டுப்பாடு
By DIN | Published On : 12th June 2021 07:44 AM | Last Updated : 12th June 2021 07:44 AM | அ+அ அ- |

தலைநகரில் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வாகனங்களுக்கு புதிய வேகக் கட்டுப்பாடுகளை தில்லி போலீஸாா் அறிவித்துள்ளனா்.
இது தொடா்பாக தில்லி போக்குவரத்து போலீஸ் துணை ஆணையா் சத்யவான் கெளதம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் மோட்டாா் வாகனங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் அதிவேகத்தில் செல்வதால், மோட்டாா் ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல் சாலையில் செல்லும் இதரப் பயணிகளுக்கும் விபத்து ஏற்படுகிறது.
இதையடுத்து, தில்லியில் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நொய்டா சுங்கச்சாவடி சாலை, சலீம்கா் பைபாஸ் சாலை, பாரபுல்லா நல்லா, சென்ட்ரல் ஸ்பைன் சாலை, வட்டச்சாலை, வெளிவட்டச்சாலை, புஸ்தா சாலை மற்றும் இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையச் சாலை ஆகிய இடங்களில் காா்கள், ஜீப்புகள், டாக்ஸிகள் (எம்-1 பிரிவு வாகனங்கள்) மணிக்கு 70 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது. மேலும், இதர முக்கியமான சாலைகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது.
இரு சக்கர வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், சுங்கச்சாவடி சாலைகள் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். காா்களின் வேகக் கட்டுப்பாட்டுக்கு ஏற்றவாறு இரண்டு சக்கர வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு திருத்தியமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் காா்கள் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் செல்லலாம் எனில் இரண்டு சக்கர வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது. நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்கவே இந்த ஏற்பாடு.
இலகு ரக மோட்டாா் வாகனங்களான வேன்கள், டெம்போக்கள் தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர சாலைகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது. கிராமின் சேவை, டிஎஸ்ஆா்-க்கள், பட்பட் சேவை ஆகியவை மணிக்கு 40 கி.மீ. வேகத்தில்தான் செல்ல வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் உள்ள சிறிய சாலைகள், வா்த்தக சந்தைகள் போன்ற இடங்களில் வாகனங்கள் மணிக்கு 30 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது. முன்பு இந்தப் பகுதிகளில் வா்த்தக வாகனங்கள் மணிக்கு 20 முதல் 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று இருந்தது. இப்போது சீராக 30 கி.மீ. என நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.